ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: 6 மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்- விசாரணை ஆணைய தலைவர் தகவல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நிகழ்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று, அதற்கான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நிகழ்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று, அதற்கான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடந்த ஜனவரியில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஜன.23-இல் நடந்த போராட்டத்தின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையத்திடம் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களிடம் மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.
முன்னதாக விசாரணை ஆணைய நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது:
விசாரணை ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்களில் சென்னை, கோவையைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சேலத்தில் வரும் நவம்பரில் விசாரணை நடைபெற இருக்கிறது. மதுரையில் புதன்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு விசாரணை நடைபெறும். முதல்நாளில் 5 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த நாள்களில் தலா 10 பேர் வீதம் மொத்தம் 25 பேரிடம் விசாரணை நடத்தப்படும். ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்த குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகும். ஆகவே, அடுத்தகட்ட விசாரணை மீண்டும் மதுரையில் நடைபெறும்.
விசாரணை ஆணையத்திடம் 1951 பேர் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர். காவல் துறையினர் மீது புகார் தெரிவித்தும், காவல் துறைக்கு ஆதரவாகவும் உள்ளன. முதல்கட்டமாக பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அடுத்ததாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற பொது பிரமுகர்களிடம் விசாரணை நடைபெறும். காவல் துறையினர் மீதான புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும்.
பொதுமக்கள் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கு கடந்த ஏப்.30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. மீண்டும் அதற்கு அவகாசம் அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை. விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்னும் 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்களில் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் விசாரணை ஆணையத்தின் முன்பு புதன்கிழமை ஆஜரானார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com