தமிழகத்தின் 29வது ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் பற்றிய 10 முக்கிய விஷயங்கள்

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தின் 29வது ஆளுநராக, பன்வாரிலால் புரோஹித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 
தமிழகத்தின் 29வது ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் பற்றிய 10 முக்கிய விஷயங்கள்

சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தின் 29வது ஆளுநராக, பன்வாரிலால் புரோஹித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

தமிழகத்தில் ஆளும் அதிமுக தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வரும் நிலையில், மாநிலத்துக்கு நிரந்தர ஆளுநராக புரோஹித் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர். இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், தமிழகத்தின் 29வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே. ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அவருக்குப் பதிலாக, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். அவர் ஓராண்டுக்கும் மேலாக பொறுப்பு ஆளுநராகவே தொடர்ந்து வந்தார்.

முதல்வர் ஜெயலலிதா மரணம், அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் நிலைமைகள் காரணமாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன. இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்.

இவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

1. பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருந்து வருகிறார். 
2. 1978-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாகபுரி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
3. அதன் பின், 1980-இல் நாகபுரி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
4. கடந்த 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நாகபுரி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 
5. ராணுவ அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். 
6. 1996-ஆம் ஆண்டு மீண்டும் மக்களவை உறுப்பினரான புரோஹித், உள்துறை, ராணுவம், பொதுத் துறை குழுக்களின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
7. தீவிர அரசியல்வாதியாக இருந்த போதும் பத்திரிகையாளராகவும் பரிணமித்தவர் புரோஹித். நாகபுரி, ஜபல்பூர், போபால் போன்ற இடங்களில் இருந்து வெளிவரும் பத்திரிகையான "தி ஹிதவாடா' பத்திரிகையின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதனைச் சிறப்பான முறையில் வெளிக் கொண்டு வந்தார். நாகபுரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அந்தப் பத்திரிகை, புரோஹித் தலைமைப் பொறுப்பை ஏற்ற காலத்தில் மத்திய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முன்னணி பத்திரிகையாக விளங்கியது.
8. தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராக புரோஹித் பொறுப்பு வகித்து வந்தார். கூடுதலாக மேகாலயாவின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்தார்.
9. மக்களவை உறுப்பினராக அவர் இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும், ஒரு முறை பாஜக சார்பிலும் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
10. பாஜக மற்றும் காங்கிரஸ் என்று அடிக்கடி கட்சி மாறியதால் அவருக்கு எதிராக கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் என பல பொறுப்புகளை வகித்து அனுபவம் பெற்றுள்ள புரோஹித், தற்போது தமிழகத்தின் 29வது ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com