உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல்: நடிகர் தனுஷ் மீது காவல் நிலையத்தில் புகார்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளதாக அவருக்கு தந்தை என சொந்தம் கொண்டாடியவர் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல்: நடிகர் தனுஷ் மீது காவல் நிலையத்தில் புகார்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளதாக அவருக்கு தந்தை என சொந்தம் கொண்டாடியவர் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன்(66). இவர் மதுரை கோ.புதூர் காவல்நிலையத்தில் அளித்த புகார் மனு விவரம்:
சிறுவயதில் காணாமல் போன எனது மகன் தான் நடிகர் தனுஷ் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணையின்போது தனுஷ் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் சென்னை எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவனையில் 1983 ஜூலை 28-ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி-விஜயலட்சுமி தம்பதிக்குப் பிறந்ததாக, சென்னை மாநகராட்சி பிறப்புச் சான்றிதழை தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மருத்துவமனையில் அவர்கள் குறிப்பிட்டுள்ள தம்பதிக்கு குழந்தை பிறந்ததாகப் பதிவு இல்லை. மேலும் சென்னை மாநகராட்சியிலும் அந்த தம்பதிகள் பெயரில் குழந்தை பதிவு எதுவும் இல்லை. எனவே, இந்த ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழில் பிறந்த தேதி, இடம் ஆகியவற்றை திருத்தம் செய்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று போலியாக தயாரித்து வழங்கியுள்ளனர். அந்த போலி ஆவணத்தின் அடிப்படையில், ஆர்.கே.வெங்கடேச பிரபு என இருந்த பெயரை ஆர்.கஸ்தூரி ராஜா என்றும் பின்னர் கே.தனுஷ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அரசிதழில் 2003 டிச.10-இல் வெளியிட்டுள்ளனர். 
தனுஷ் பிறந்த நாளாக 28. 7.1983 என்று குறிப்பிட்டு போலியாக ஆதார் அட்டை பெற்றுள்ளனர். மேலும் போலியாக பெற்றுள்ள குடும்ப அட்டையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தபோது அவை போலியானது என்று தெரியவந்தது. மேலும் அவரது உடலில் உள்ள கருப்பு மச்சத்தையும் லேசர் சிகிச்சை மூலம் அழித்து விட்டார். நீதிமன்ற விசாரணையின்போது ஆஜரான மதுரை அரசு மருத்துவமனை டீன் இதுகுறித்து சான்று அளித்துள்ளார். எனவே உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்த தனுஷ்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இப்புகார் குறித்து கதிரேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளருக்கு பதிவுத் தபால் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் போலி ஆவணங்கள் தொடர்பாக போலீஸார் விசாரிக்க வேண்டும் என்பதற்காக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார்.
புகார் தொடர்பாக போலீஸார் கூறும்போது, கதிரேசன் அளித்துள்ள புகார் பெறப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் போலீஸார் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது. புகார் தொடர்பாக மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ஆலோசனையின்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com