மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் சாவு

கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில், 7 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் சாவு

கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில், 7 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். 
கிருஷ்ணகிரி அருகே தண்டேகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (75). இவருக்கு காளிரத்தினம் (50), வெங்கடசாமி (45), செல்வம் (36) என 3 மகன்களும், புஷ்பா (38) என்ற மகளும் உள்ளனர். வெங்கடசாமிக்கு மட்டும் திருமணம் ஆன நிலையில், அவரது மனைவி ஜெயந்தி, வசந்தகுமார் (16), பகவதி (எ) சந்துரு (13) என்ற மகன்களும், முல்லை என்ற மகளும் உள்ளனர். வெங்கடசாமி, கடந்த ஆண்டு இறந்துவிட்டார். மற்றவர்கள் 70- ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு ஒன்றில் வசித்து வந்தனர்.
வறுமையின் காரணமாக, 10-ஆம் வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாமல் வசந்தகுமார் கூலி வேலை செய்து வந்தார். சந்துரு, முல்லை ஆகியோர் போகனப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்தனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், இவர்கள் சேதமடைந்த ஓட்டு வீட்டில் வசிக்காமல், அதன் அருகே உள்ள ஒரு குடிசை வீட்டில் புதன்கிழமை இரவு உறங்கச் சென்றனர். 
அப்போது, வியாழக்கிழமை அதிகாலை ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதில் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராதா, புஷ்பா, வசந்தகுமார், பகவதி (எ) சந்துரு, முல்லை ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டு வீட்டின் ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த காளிரத்தினத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்டுப் படை வீரர்கள், போலீஸார் உள்ளிட்டோர் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், நிகழ்விடத்தை பார்வையிட்டதோடு, சடலங்களை பிரேத பரிசோதனை செய்து, உறவினரிடம் விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். 
உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன. 
திருப்பத்தூர் அருகே தம்பதி சாவு: இதேபோல், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு பெய்த கன மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள கஜல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவாஸ் (42). தொழிலாளியான இவரது மனைவிஆயிஷா (40). 
கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் நவாஸ் வீட்டின் அருகே குடியிருக்கும் நாகராஜ் என்பவருடைய வீட்டின் வெளிப்புற சுவர் ஈரப்பதத்துடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு திருப்பத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் நாகராஜ் வீட்டின் சுவர் இடிந்து நவாஸ் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நவாஸ், ஆயிஷா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்கள் வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களை மீட்டனர். பின்னர், இருவரது சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து கந்திலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com