டெல்டா பாசனத்துக்காகக் கல்லணை திறப்பு: 4.61 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடிக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களின் சம்பா, தாளடி பாசனத்துக்காக கல்லணை வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.
டெல்டா பாசனத்துக்காகக் கல்லணை திறப்பு: 4.61 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடிக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களின் சம்பா, தாளடி பாசனத்துக்காக கல்லணை வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை அக். 2-ம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லணையில் இருந்து காவிரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அமைச்சர்கள் ஆர். காமராஜ், இரா. துரைக்கண்ணு, ஓ.எஸ். மணியன், எம்.பி.க்கள் ஆர். வைத்திலிங்கம், ஆர்.கே. பாரதிமோகன் ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டு, மலர் தூவி வணங்கினர். இதைத்தொடர்ந்து, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்துவிட்டனர்.
காலையில் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் வினாடிக்கு தலா 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் வரத்தைத் தொடர்ந்து மாலையில் கல்லணையிலிருந்து வினாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 4,750 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,300 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,200 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
தேவைக்கேற்ப நீர் பங்கீட்டில் மாற்றம்: இந்தத் தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்களின் கடைமடைப்பகுதிகளுக்கு ஒரு வாரத்தில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 94.47 அடியாகவும், நீர் இருப்பு 57.910 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அக்டோபர் இறுதி வரை சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நீர் பங்கீட்டில் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
சம்பா, தாளடி: இதன் மூலம், ஏறத்தாழ 4.61 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வேளாண்மைத் துறையினர் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி 1.05 லட்சம் ஹெக்டேரிலும், தாளடி 27,000 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படும். இதில், சுமார் 29,730 ஹெக்டேரில் நேரடி விதைப்பும், 1.02 லட்சம் ஹெக்டேரில் நடவும் செய்யப்படும். இதுவரை 3,480 ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பாவில் 1,23,576 ஹெக்டேரிலும், தாளடியில் 23,324 ஹெக்டேரிலும் என மொத்தம் 1,46,900 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 1,12,800 ஹெக்டேரில் நேரடி விதைப்பும், 34,100 ஹெக்டேரில் நடவும் செய்யப்படவுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 66,830 ஹெக்டேரில் நேரடி விதைப்பும், 11,068 ஹெக்டேரில் நடவுப் பணியும் முடிவடைந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் சம்பா பருவத்துக்கு நேரடி விதைப்பு 50,000 ஹெக்டேரிலும், நடவு பயிர் 47,600 ஹெக்டேரிலும் என மொத்தம் 97,600 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், நேரடி விதைப்பு மூலம் 20,391 ஹெக்டேரிலும், நடவு முறையில் 3,647 ஹெக்டேரிலும் என மொத்தம் 24,038 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தாளடியில் 34,100 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 6,861 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,000 ஹெக்டேரிலும், கடலூர் மாவட்டத்திலும் 41,000 ஹெக்டேரிலும் சம்பா சாகுபடி செய்யப்படவுள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் மொத்தம் ஏறத்தாழ 4.61 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி செய்ய வாய்ப்புள்ளது.
தண்ணீர் வராத நிலையில் திறப்பு: மேட்டூர் அணையிலிருந்து அக். 2-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை காலை கல்லணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் அடிப்படையில் கல்லணை திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை காலை திருச்சி மாவட்டத்தைத்தான் எட்டியது. கல்லணைக்கு தண்ணீர் வராத நிலையில் ஏற்கெனவே புஷ்கர விழாவுக்காக வந்த தண்ணீரும், மழை நீரும் அணையில் தேங்கி இருந்தது. இதை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் ஆட்சியர்கள் ஆ. அண்ணாதுரை (தஞ்சாவூர்), இல. நிர்மலராஜ் (திருவாரூர்), சீ. சுரேஷ்குமார் (நாகை), கு. ராசாமணி (திருச்சி), சு. கணேஷ் (புதுக்கோட்டை), அரசு கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் சி.வி. சேகர் (பட்டுக்கோட்டை), எஸ். பவுன்ராஜ் (பூம்புகார்), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பாரதி (சீர்காழி), ஜெயராமலிங்கம் (ஜெயங்கொண்டம்), பொதுப்பணித் துறை திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், தஞ்சாவூர் கண்காணிப்புப் பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com