'பெற்றோர், பிள்ளைகளை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்': தொல்லியல் துறை ஆணையர்

பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அருங்காட்சியகங்கள் துறை மற்றும் தொல்லியல் துறை ஆணையர் டி.ஜகந்நாதன் கூறினார்.

பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அருங்காட்சியகங்கள் துறை மற்றும் தொல்லியல் துறை ஆணையர் டி.ஜகந்நாதன் கூறினார்.
தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறை, தொல்லியல் துறை மற்றும் 'சென்னை 2000 பிளஸ்' அறக்கட்டளை ஆகியவை இணைந்து 'சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு' என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளை கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் நடத்தினர். அவற்றின் நிறைவு விழா எழும்பூர் அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சியில் டி.ஜகந்நாதன் பேசியது: சென்னை நகரமானது 300, 400 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது என்று தான் நாம் நினைத்திருப்போம். ஆனால் சுமார் 2 ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. பல்லாவரம் என்று அழைக்கப்படும் பல்லவபுரத்தில் இரும்பு காலத்திலேயே (அயர்ன் ஏஜ்) முன்னோர் வசித்த குகை கண்டறியப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் 5-ஆம் நூற்றாண்டு காலத்து சிற்பங்கள் உள்ளன.
சீன பயண எழுத்தாளர் ஹூவாங் சுவாங் காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தை நாடி வந்தார். ஆனால், இன்று நாம் நமது பாரம்பரியம், கலாசாரம் என்ற எதுவும் அறியாமல் வாழ்ந்து வருகிறோம்.
நமது பாரம்பரிய உணவான இட்லியின் சிறப்பைக் கூட அறியாமல் சீன உணவுகளிலும், துரித உணவுகளிலும் ஆர்வம் காட்டுகிறோம். சென்னையில் திருவொற்றியூர் கல்வெட்டுகள், கூவம் நதி நாகரீகம் உள்ளிட்ட பலவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உலோகவியலில் 5 உலோகங்களை சேர்த்து படைப்புகளை உருவாக்கலாம் என்று கண்டுபிடிப்பதற்கு முன்பே 5 உலோகங்களிலான சிற்பங்கள் நமது நாட்டில் உருவாகியுள்ளன. தற்போது எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் ஐந்து உலோகங்களால் ஆன ஆயிரமாண்டு பழமையான சிற்பம் எந்தவித சேதமும் அடையாமல் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளை அருங்காட்சியகங்களுக்கு அழைத்து வர வேண்டும். அங்குதான் நமது கலாசார சொத்து பாதுகாக்கப்படுகிறது என்பதை வளரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அருங்காட்சியகங்கள் துறை உதவி இயக்குநர் க.சேகர், தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், 'சென்னை 2000 பிளஸ்' அறக்கட்டளையின் தலைவர் ஆர்.ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசும், பள்ளிக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com