மருத்துவ மாணவர்கள் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றுக்கொண்டதால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும்
மருத்துவ மாணவர்கள் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றுக்கொண்டதால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே தங்களிடமும் வசூலிக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ராஜு என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் என் மனைவி பாக்கியாவை பிரசவத்துக்காக சேர்த்தேன். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்ற மருத்துவர்களைப் பணி செய்யவிடாமல் தடுப்பது தெரியவந்தது. இதனால், வேறு வழியில்லாமல் தன் மனைவியை வேறொரு மருத்துவமனையில் சேர்த்தேன். முதுநிலை மருத்துவ மாணவர்களின் வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஏற்கெனவே மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். சாதாரண தொழிலாளர்களை போன்று அவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராட பல்வேறு வழிகள் உள்ளன. 
இந்தக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வரும் 211 பேரில் 151 பேர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணியில் உள்ளவர்கள். மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஊதியம் பெற்றுக்கொண்டு மேற்படிப்பையும் படித்து வருகின்றனர். மற்ற 60 பேருக்கு அரசு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கி வருகிறது. அரசிடம் இருந்து ஊதியம் மற்றும் உதவித்தொகையை பெற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்க முடியாது.
அதேவேளையில், மற்ற மருத்துவர்களைப் பணி செய்ய விடாமல் தடுக்கவும் முடியாது. உரிய காலத்தில் சிகிச்சை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மருத்துவர்களின் கையில்தான் உள்ளது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இந்த புனிதமான பணியை மேற்கொள்ளமாட்டோம் என மறுக்கவும் முடியாது. எனவே, முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது. மற்ற மருத்துவர்கள், பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com