கொடைக்கானலில் தொடங்கிய 'ஸ்கல்' படகுப் போட்டி பாதியில் நிறுத்தம்

கொடைக்கானல் ஏரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கல் (வேக துடுப்பு) படகுப் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஏரியில் தவறி விழுந்ததால் போட்டி பாதியிலேயே
கொடைக்கானலில் தொடங்கிய 'ஸ்கல்' படகுப் போட்டி பாதியில் நிறுத்தம்

கொடைக்கானல் ஏரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கல் (வேக துடுப்பு) படகுப் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஏரியில் தவறி விழுந்ததால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கொடைக்கானல் போட் மற்றும் ரோயிங் கிளப் ஆகியவற்றுடன் தமிழ்நாடு அமெச்சூர் ரோயிங் கிளப் அசோசியேசன் இணைந்து கொடைக்கானல் ஏரியில் முதலாவது மாநில அளவிலான வேகத் துடுப்பு படகுப் போட்டியை (ஸ்கல்) நடத்தியது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 60-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டி 15 பிரிவுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இப்போட்டிக்கு கொடைக்கானல் போட் மற்றும் ரோயிங் கிளப் தலைவர் ராமச்சந்திர துரைராஜா தலைமை வகித்தார். இப்போட்டி 500 மீட்டருக்கு நடைபெற்றது. முதலில் சிறுவர்கள் ஒற்றையர், சிறுவர்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர், பெண்கள் இரட்டையர் என போட்டி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் போட்டி தொடங்கியது. அப்போது ஏரியில் கொடைக்கானல் நகராட்சி பணியாளர்கள் படகில் சென்று அங்குள்ள செடி, கொடிகள் மற்றும் தாவரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர் ஈஸ்வரன் என்பவரின் படகு, நகராட்சி பணியாளர்களின் படகுடன் மோதியதில் அவர் ஏரியில் தவறி விழுந்தார். இதனைத் தொடர்ந்து தனியார் படகு குழாமைச் சேர்ந்தவர்களும், நகராட்சி பணியாளர்களும் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதுடன் போட்டி நடத்துபவர்களுக்கும், நகராட்சி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதுகுறித்து போட்டி நடத்துபவர்கள் கூறியதாவது: முதல் முறையாக மாநில அளவில் நடைபெறும் வேகத் துடுப்பு (ஸ்கல்) படகுப் போட்டியில் பங்கு பெறுவதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் வீரர்கள் வந்துள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் இடையூறு செய்ததால் பாதியில் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவரும் ஏரியில் விழுந்து அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகள், போட்டி ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அக்.7, 8) கொடைக்கானல் ஏரியில் இப்படகுப் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com