லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 1 லட்சம் மணல் லாரிகள் ஓடாது: செல்ல.ராசாமணி பேட்டி

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகம்

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மணல் லாரிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்படும் என தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார். 
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தம்-2017 அமல்படுத்தப்பட்டால், வட்டார போக்குவரத்து அலுவலங்கங்கள் மூடப்பட்டு, வாகனங்கள் பதிவு, எப்.சி உள்ளிட்ட அனைத்து பணிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றப்படும். லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பழுது நீக்கம் செய்வதற்கு கூட அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணிமனைகளையே பயன்படுத்த வேண்டும். 
லாரி மற்றும் அனைத்து மோட்டார் வாகனங்களில் தற்போது சாலை விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றம் நிர்ணயிக்கும் தொகையை வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன.
புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் இழப்பீடு கொடுக்க வேண்டியிருந்தால், அதை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். மேலும், இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை எப்.சி சான்று பெற வேண்டும். 
இதுபோன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் அனைத்து வாகன உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படும். எனவே, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பின்படி, புதிய வாகனம் வாங்கும் போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்தி வாங்க வேண்டியுள்ளது. 
மேலும் வாகனங்களை விற்பனை செய்யும்போது மீண்டும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும். 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9, 10 ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. 
இதை ஏற்று 2 நாள்களும் தமிழகத்தில் உள்ள சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்தில் மணல் லாரி உரிமையாளர்களும் கலந்துகொள்வார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com