15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தென்பெண்ணை ஆறு!  சாத்தனூர் அணை நீரை எதிர்நோக்கும் விவசாயிகள்

விழுப்புரம் மாவட்டம் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆறு கடந்த 15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. 
15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தென்பெண்ணை ஆறு!  சாத்தனூர் அணை நீரை எதிர்நோக்கும் விவசாயிகள்

விழுப்புரம் மாவட்டம் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆறு கடந்த 15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது.  இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர்,  விவசாய ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் சாத்தனூர் அணை நீரை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம்,  சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை,  விழுப்புரம்,  கடலூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. 119 அடி உயரமும்,  7,321 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்ட சாத்தனூர் அணைக்கு,  கிருஷ்ணகிரி கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தண்ணீர் வரத்துள்ளது. பெருமழைக் காலங்களைத் தவிர்த்து பெரும்பாலும் இந்த அணை நிரம்புவதில்லை.  இதனால்,  போதிய தண்ணீரின்றி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகளவில் இருப்பதில்லை.

சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் விழுப்புரம் மாவட்டத்தில்  திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையில் தொடங்கி கண்டரக்கோட்டை வரை சுமார் 60 கி.மீ. தொலைவு கடந்து செல்கிறது. இந்த வழித்தடத்தில் ஏராளமான கிளை ஆறுகள்,  வாய்க்கால்களில் பிரியும் தண்ணீர் ஏரி,  குளங்களை நிரப்பிச் செல்கிறது.

விழுப்புரம் மாவட்டம் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆறு கடந்த 15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழை நீர் மட்டும் ஓரிரு நாள்கள் ஆற்றில்  செல்வதோடு சரி. போதிய மழையின்மை, சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைவு போன்ற காரணங்களால் தண்ணீர் திறப்பின்றி தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் வரத்தில்லை.

இருப்பினும், அவ்வப்போது  திறக்கப்படும் அணை நீர் விழுப்புரம் மாவட்ட எல்லையோடும்,  அதிகபட்சமாக திருக்கோவிலூர் பகுதியோடும் நின்றுவிடுகிறது.

இதனால், திருக்கோவிலூர் தொடங்கி,  கண்டரக்கோட்டை எல்லை வரை தென்பெண்ணை ஆறு நீண்ட காலமாக வறண்டு கிடக்கிறது.

இதுபோன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோவிலூர்,  விழுப்புரம் எல்லீஸ்சந்திரம்,  மரகதபுரம்,  பிடாகம்,  பேரங்கியூர்,  மாரங்கியூர்,  கண்டரக்கோட்டை என பல இடங்களில் அரசு மணல் குவாரியும்,  தனியார் குவாரிகளும் அமைக்கப்பட்டு ஆற்றில் 30 அடி ஆழம் வரை மணல் எடுக்க வாய்ப்பாக அமைந்து போனது.  இதனால், நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் கூறியதாவது: சாத்தனூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் போதிய தண்ணீர் திறக்காததால் தென்பெண்ணை ஆறு கடந்த 15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும், அந்த தண்ணீர் மாவட்ட எல்லையோடு நின்று விடும். இதனால், சுமார் 50 கி.மீ. தொலைவில்  ஆங்காங்கே 30 அடி ஆழம் வரை  மணல் எடுக்கப்பட்டுள்ளது. அணை நீர் வந்தாலும்,  ஆற்றுப் பள்ளங்களில் தேங்கி விடுகிறது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இந்தப் பகுதியில் 10 முதல் 20 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது, 100 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால்,  விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர்ப் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.  

அண்மையில் திறக்கப்பட்ட அணை நீரும் திருக்கோவிலூர் வரை வந்து நின்றுவிட்டது.  தற்போது,  அணையில் நீர் நிரம்பி வருவதால்,  திறந்துவிடப்படும் தண்ணீரை விழுப்புரம் எல்லீஸ் அணைக்கட்டு வழியாக செல்லவும், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து தண்ணீர் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விழுப்புரம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு: தென்பெண்ணை ஆற்றின் இடையே திருக்கோவிலூர் அணைக்கட்டு,  விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்கட்டுகள் உள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,  கடந்த செப்.25 முதல் 30-ஆம் தேதி வரை 5 நாள்கள் சாத்தனூர் அணையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீரும்  திருக்கோவிலூர் அணைக்கட்டுடன் நின்றுவிட்டது.  இதனால்,  விழுப்புரம் பகுதிக்கு நீர் வரத்தின்றி வறண்ட நிலையே தொடர்கிறது.

விழுப்புரம் நகருக்கு குடிநீர் வழங்கும் எல்லீஸ் அணை அருகே உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் இறங்கிவிட்டது. பழைய கிணறுகளில் தண்ணீர் வறண்டதால்,  புதிய கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றனர். கடந்த மாதம் வரை தொடர்ந்த வறட்சியால்,  ஆழ்துளைக் கிணறுகளில் வெகுவாக தண்ணீர் குறைந்துவிட்டதாக நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே, இந்த முறையாவது விழுப்புரம் பகுதியை அணைநீர் கடந்து செல்லும் வகையில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து விழுப்புரம் பொதுப்பணித் துறை அதிகாரி  சண்முகம் கூறியதாவது: சாத்தனூர்  அணையில் போதிய நீரின்மையால் கடந்த காலங்களில் தென்பெண்ணைக்கு நீர்வரத்தில்லை.  ஆனால், இந்த ஆண்டு நீர்வரத்துள்ளது. கடந்த செப்.25-முதல் 5 நாள்கள் விழுப்புரம் மாவட்டத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டனர்.  திருக்கோவிலூர் அணைக்கட்டு மூலம் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  தற்போது,  அணை நிரம்பி செவ்வாய்க்கிழமை நீர்மட்டம் 117 அடியை எட்டியதால்,  விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  இந்த தண்ணீர் ஓரிரு நாள்களில் வந்து சேரும்.  இந்த முறை விழுப்புரம் எல்லீஸ் அணைக்கட்டையும் கடந்து,  கடலூர் மாவட்டம் வழியாக கடலுக்கே தண்ணீர் செல்லும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com