12 ஆண்டுகளில் 20 டன் குப்பை சேகரித்த மனநோயாளி: இப்போது அகற்றிய மாநகராட்சி இதுவரை என்ன செய்தது?

சென்னையில் உள்ள மனநோயாளி ஒருவர் கடந்த 12 வருடங்களாக தனது இல்லத்தில் குப்பைகளை சேகரித்த அவலம் நிகழ்ந்துள்ளது.
12 ஆண்டுகளில் 20 டன் குப்பை சேகரித்த மனநோயாளி: இப்போது அகற்றிய மாநகராட்சி இதுவரை என்ன செய்தது?

சென்னை புறநகர் பகுதியான கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ஜெய் நகர். இங்கு வசித்து வரும் பெண் ஒருவர் தனது இல்லத்தில் சுமார் 20 டன் குப்பைகளை கடந்த 12 வருடங்களாக சேகரித்து வந்துள்ளார்.

அந்தப் பெண் தனது வீட்டின் முகப்புப் பகுதியிலேயே இந்த குப்பை கிடங்கை உருவாக்கிய அவலநிலை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் சாவித்திரி என்பவர் கூறியதாவது:

நாங்கள் இப்பகுதியில் கடந்த 30 வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 12 வருடங்களாக இந்தப் பெண் இரவு நேரங்களில் வெளியே சென்று குப்பைகளை சேகரித்து வந்துள்ளார். சில சமயங்களில் கைகளில் அள்ளி வந்தும், சில நேரங்களில் பெரிய அளவிலான பைகளிலும் குப்பைகளை சேகரித்து வருவார். அதனை அவரது வீட்டின் முகப்புப் பகுதியில் தேக்கி வைப்பார். இந்த விவகாரம் தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் நாங்கள் அனைவரும் பலமுறை அவரை தடுத்து நிறுத்தியுள்ளோம். சில சமயங்களில் சண்டையிடவும் செய்தோம். ஆனால் இது எதையும் பொருட்படுத்தாமல் அவர் இச்செயலை தொடர்ந்து செய்து வந்தார். தற்போது இதே பகுதியில் 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சியில் புகார் அளிக்கவும் செய்தோம் என்றார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் இவ்விகாரத்தில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி அந்தப் பெண் இல்லத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், தேக்கி வைக்கப்பட்ட அந்தக் குப்பைக் குவியலை அப்புறப்படுத்தினர்.

இதற்காக மாநகராட்சி சார்பில் 4 ஊழியர்கள், 5 லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சமயம் கரப்பான்பூச்சி, எலி உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் அதிலிருந்து அதிகளவில் வெளியேறியுள்ளது. மொத்தம் 20 டன் வரையிலான குப்பைகள் அகற்றப்பட்டன. காலை தொடங்கி மாலை வரை இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில்,

இவ்விவகாரம் தொடர்பான புகாரை அடுத்து அந்தப் பெண்ணுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு எவ்வித பலனும் இல்லை. எனவே நேரில் வந்தபோதுதான் புரிந்தது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது என்று தெரியவந்தது. பின்னர் அவரிடம் பேசியபோது, குப்பைகளின் மதிப்பு தெரியாமல் அனைவரும் அதனை வீசிவிடுகின்றனர். குப்பைகளைக் கொண்டு பலர் பணம் சம்பாதிக்கின்றனர். நானும் அவ்வப்போது பீர் பாட்டில்களை விற்று பணம் சம்பாதித்தேன். மற்ற குப்பைகளை பின்வரும் காலங்களில் விற்பனை செய்ய தேக்கி வைத்துள்ளேன் என்றார். எனவே அதிலிருந்து அவருக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுமாறு கூறி சமாதானப்படுத்தினோம். அவரும் சில கிழிந்த பொம்மைகள், செருப்பு, பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டார். பின்னர் தான் எங்களால் சுத்தம் செய்ய முடிந்தது. அந்தப் பெண்ணின் உறவினர்கள் சிதம்பரத்தில் இருப்பது தெரியவந்தது. எனவே அவர்களிடம் அந்தப் பெண்ணுக்கு தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றார்.

ஒருவர் தனது வீட்டின் முகப்புப் பகுதியிலேயே அதுவும் கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து சுமார் 20 டன் வரையிலான குப்பைகளை மலைபோல் தேக்கி வந்துள்ளார். சுகாதாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் இதுபோன்ற செயல்களை கடந்த 12 வருடங்களாக சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்த்து வந்ததுதான் இதில் விநோதம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com