டெங்கு காய்ச்சல் பாதிப்பை பேரிடராக கருதி மத்திய அரசு உதவ வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள டெங்கு காய்ச்சல் பாதிப்பை பேரிடராக கருதி மத்திய அரசு உதவ வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பை பேரிடராக கருதி மத்திய அரசு உதவ வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள டெங்கு காய்ச்சல் பாதிப்பை பேரிடராக கருதி மத்திய அரசு உதவ வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க பிரேமலதா விஜயகாந்த் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை காலை வந்தார்.
இத்தகவலறிந்து மருத்துவமனை வளாகத்தில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். 
ஆனால், நோயாளிகளை பிரேமலதா விஜயகாந்த் சந்திக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதையடுத்து, மருத்துவமனை டீன் அறையை அக்கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்துடன், டீன் அசோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அதில், ஒரு சில நிர்வாகிகள் மட்டும் அவருடன் சென்று நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டது. 
இதையடுத்து, அவர் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் அவர்களுக்குப் பழம், ரொட்டி ஆகியவற்றை வழங்கினார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரையும் அவர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறோம். 
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே டெங்கு காய்ச்சலுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுத்தமான நகரம் என்று பெயரெடுத்த கோவை மாநகரத்திலேயே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்றால், பிற நகரங்களின் நிலை என்னவாக இருக்கும்? உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் தமிழகத்தில் சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. 
இதைக் கவனிக்க வேண்டிய அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடவும், பதவியைத் தக்க வைக்கவுமே கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் மாவட்டமான சேலத்திலும், சுகாதாரத் துறை அமைச்சரின் மாவட்டமான புதுக்கோட்டையிலும்தான் டெங்கு பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள டெங்கு காய்ச்சல் பாதிப்பை பேரிடராக கருதி மத்திய அரசு உதவ வேண்டும். டெங்குவால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். ஆனால், 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அரசு கூறி வருகிறது. இதை மறைக்கவே டெங்கு காய்ச்சலையும், மர்மக் காய்ச்சல் என கூறுகின்றனர். 
நவம்பர் 4-ஆம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என மக்களோடு நாங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். 
நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் சக்தி தேமுதிகவுக்கு உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com