டெங்கு பாதிப்பு விவகாரம்: மத்தியக் குழுவினர் எங்கெங்கு ஆய்வு?

டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய வல்லுநர் குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய வல்லுநர் குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படி 11,744 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 40 பேர் உயிரிழந்துள்ளனர். வழக்கத்தைக் காட்டிலும் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மாநில அரசின் நடைமுறைகளுடன் மத்திய அரசும் இணைந்து செயல்பட உள்ளது. அதனடிப்படையில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பை ஆய்வு செய்யும் மத்திய அரசின் வல்லுநர் குழு தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
5 பேர் கொண்ட குழு: பூச்சியியல் வல்லுநர், சிகிச்சை மேலாண்மை நிபுணர் (மருத்துவர்), பொது சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 5 வல்லுநர்கள் தில்லியிலிருந்து சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்தனர். இக்குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி கூறியது:
இதற்கு முன் 2012-ஆம் ஆண்டிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் வல்லுநர் குழு தமிழகம் வந்திருந்தது. தற்போது 5 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். 
ஆலோசனைக் கூட்டம்: தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மத்தியக் குழுவினருடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளோம். இந்தக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சலில் தமிழகத்தின் தற்போதைய நிலை, நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை ஆகிய விவரங்கள் அளிக்கப்படும். தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், எதிர்காலத் திட்டம் குறித்தும் தெரிவிக்கப்படும். இதனையடுத்து மத்திய அரசின் வல்லுநர் குழுவினர் இனி எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
எங்கு ஆய்வு?: மாநில அரசுடனான ஆலோசனைக்குப் பிறகு மத்திய அரசின் வல்லுநர் குழு கள ஆய்வுக்குச் செல்ல உள்ளது.
சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் நிதி?: தொற்றுநோய் ஒழிப்புக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு ஏற்கெனவே ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது வழக்கமான ஒதுக்கீடுதான். எனவே, இந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக்குப் பிறகு தமிழக அரசு டெங்கு ஒழிப்புக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு கோர வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com