பணியாளர் சீரமைப்புக் குழு அமைப்பு: மு.க.ஸ்டாலின், அன்புமணி கண்டனம்

அரசு வேலைவாய்ப்புகளைக் கையாள பணியாளர் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசு வேலைவாய்ப்புகளைக் கையாள பணியாளர் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை உரிய காலத்துக்குள் அமல்படுத்துவதை விடுத்து, நிர்வாகக் குழு என்ற ஒன்றை நியமித்து தமிழக அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டதால் அக். 13}ஆம் தேதிக்குள் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது உயர்நீதிமன்றம். இந்தப் பரிந்துரைகளை ஏற்கும் அறிவிப்பில், பணியாளர் சீரமைப்புக்குழு ஒன்று அமைக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான அரசுப் பணியிடங்களை நிரப்ப எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், நிரந்தர அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும் திட்டமிட்டு குறைக்கும் உள்நோக்கம் அரசுக்கு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
அன்புமணி: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களை ஆய்வு செய்து, அவற்றில் பெரும்பாலானவற்றைத் தேவையில்லாத பணியிடங்களாக அறிவித்து அவற்றை ஒழிப்பது, மீதமுள்ள பணியிடங்களை அயல் பணி முறையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ நிரப்புவது ஆகியவைதான் பணியாளர் சீர்திருத்தக்குழு அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம். தற்போது பணியாளர் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரை என்ற பெயரில், காலியாக உள்ள 5 லட்சம் அரசுப் பணியிடங்களும் ஒழிக்கப்படவுள்ளன. புதிதாக உருவாகும் காலியிடங்களில் பெரும்பாலானவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என்பதால் அரசு வேலைவாய்ப்பு என்பதே இனி இல்லாமல் போய்விடும். இம்முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் இளைஞர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com