பழனி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டுயானைக்கு வெள்ளிக்கிழமை கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
பழனியை அடுத்த புளியம்பட்டியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறை மற்றும் கால்நடைத்துறையினர். (வலது) சிகிச்சைக்குப் பின்னர் எழுந்து நின்ற பெண் யானை.
பழனியை அடுத்த புளியம்பட்டியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறை மற்றும் கால்நடைத்துறையினர். (வலது) சிகிச்சைக்குப் பின்னர் எழுந்து நின்ற பெண் யானை.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டுயானைக்கு வெள்ளிக்கிழமை கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
பொருந்தல் அணை புளியம்பட்டியில் கடந்த சில நாள்களாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானையும், சுமார் 5 வயது மதிக்கத்தக்க அதன் ஆண் குட்டி யானையும் சுற்றித் திரிந்தன. இதில் பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு உணவு அருந்த முடியாமல் அவதியடைந்து வந்ததை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தனர்.
இந்நிலையில், இந்த யானை வெள்ளிக்கிழமை அதிகாலை வீரப்பன் என்பவரது மாந்தோப்பில் வந்து படுத்துக் கொண்டது. இதுகுறித்து பழனி வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டதையடுத்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், ரேஞ்சர் கணேஷ்ராம் மற்றும் வனக் குழுவினர் அங்கு வந்தனர். அப்போது அவர்களை தாய் யானையை நெருங்க விடாமல் குட்டி யானை தடுத்தது. இதனால் வெடி போட்டு அதை அங்கிருந்து விரட்டி விட்டு, கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், முருகன், முருகபாண்டி உள்ளிட்டோர் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர். யானையின் உடலை சோதனை செய்ததில் சிறுநீர் கழிக்குமிடத்தில் ஏற்பட்ட காயத்தால் புழுக்கள் உண்டானதும், அந்த வேதனையில் உணவு அருந்தாமல் அது இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த யானைக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குளுகோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டன. சுமார் 10 பாட்டில்கள் ஏற்றப்பட்ட நிலையில், யானைக்கு சுயநினைவு திரும்பியது. இதைத் தொடர்ந்து யானைக்கு உடலில் உள்ள புழுக்கள் வெளியேற ஸ்பிரே மற்றும் ஊசி மருந்துகள் செலுத்தப்பட்டன. இதனால் ஏராளமான புழுக்கள் அந்த காயத்தில் இருந்து வெளியேறின. பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பழங்கள், கரும்புகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிட்ட யானை மெதுவாக மலையடிவாரம் நோக்கி சென்றது. 
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, இந்த யானையின் நடமாட்டம் இன்னும் ஓரிரு நாள்களுக்கு யானை கண்காணிப்பாளர்களால் தீவிரமாக கண்காணிக்கப்படும். எனவே அந்த யானையை விவசாயிகள் யாரும் விரட்டி அச்சுறுத்த வேண்டாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com