வேலைவாய்ப்பு தரும் வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

வேலைவாய்ப்பு பெற்றுத்தரக் கூடிய வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
விழாவில் கண்காட்சி மலரை வெளியிடுகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். உடன் போக்குவரத்துத் துறை அமைச்சர்  எம்ஆர்.விஜயபாஸ்கர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், கிருஷ
விழாவில் கண்காட்சி மலரை வெளியிடுகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். உடன் போக்குவரத்துத் துறை அமைச்சர்  எம்ஆர்.விஜயபாஸ்கர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், கிருஷ

வேலைவாய்ப்பு பெற்றுத்தரக் கூடிய வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் கரூர் பரணிபார்க் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுப்புற கண்காட்சி மற்றும் அறிவியல் பெருவிழாவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் தலைமையில் தொடக்கி வைத்தும், விழா மலரை வெளியிட்டும் அமைச்சர் செங்கோட்டையன் மேலும் பேசியது:
"தமிழகத்தில் ஆட்சி வலிமையாக இருப்பதுபோல, இயற்கையும் நமக்கு எப்போதும் சாதகமாக உள்ளது. தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ. 26,932 கோடியை அரசு ஒதுக்கிசிறப்புமிக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழைகளில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வந்தார். எடப்பாடி அரசும் அதைத் தொடர்கிறது. மத்திய அரசின் அனைத்துத் தேர்வுகளிலும் மாணவர்கள் வெற்றிபெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு 3,000 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது. 
9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை ரூ. 483 கோடியில் வகுப்புகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. 12 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத பாடத்திட்டங்கள் வேலைவாய்ப்பு பெற்றுத் தரக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளன. வரும் நவம்பருக்குள் இத்திட்டம் முழுமை பெறும். 
2018-19-ஆம் ஆண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்கும், 2019,20-ல் 2,7,10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கும், 2020,2021-ல் 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கும் தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. மேலும் மாணவ, மாணவிகளின் உடலையும், உள்ளத்தையும் ஊக்கப்படுத்தும் யோகா, விளையாட்டுக்காக 45 நிமிடங்கள் பள்ளி நேரத்தில் ஒதுக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர்.
கண்காட்சியைத் தொடக்கிவைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு கணினி முதல் காலணி வரை 14 வகையான உபகரணங்களை வழங்கி வந்தார். 
தற்போதும் அது தொடர்கிறது. இதன்படி கரூர் மாவட்டத்தில் 6,638 மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. 
6 முதல் 8 வரை, 9 முதல் 10-ம் வகுப்பு வரை, பிளஸ்-1, பிளஸ்-2 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அறிவியல் கண்காட்சி நடத்துவதன் மூலம் நம் மாவட்டத்தில் இளம் விஞ்ஞானிகள் உருவாகி வருகின்றனர். அறிவித்த திட்டங்களை தமிழக அரசு 100 சதவீதம் நிறைவேற்றி வருகிறது. இதன் மூலம் 21 சதவீதமாக இருந்த உயர்கல்வி பயின்றோரின் சதவீதம் தற்போது 44 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
பின்னர் கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டனர். 
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன், பரணிபார்க் கல்விக் குழும தாளாளர் எஸ். மோகனரெங்கன், பள்ளி முதன்மை முதல்வர் சொ. ராமசுப்ரமணியன், அதிமுக நிர்வாகிகள் ஏ.ஆர். காளியப்பன், சாகுல்அமீது, திருவிகா, கமலக்கண்ணன், விசிகே. ஜெயராஜ், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
வரும் 14-ம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 128 மாணவர்களின் படைப்புகளும், 32 ஆசிரியர்களின் படைப்புகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com