6,000 காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

தமிழக காவல் துறையில் 6,000-த்துக்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
6,000 காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்


தமிழக காவல் துறையில் 6,000-த்துக்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். 15 ஆயிரத்து 621 பேருக்கு பணி உத்தரவுகளை வழங்கும் அடையாளமாக 45 பேருக்கு விழா மேடையிலேயே உத்தரவுகளை அவர் அளித்தார். முன்னதாக, விழாவில் அவர் பேசியது:-
காவல் துறையில் சீருடைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு தனி வாரியத்தை கடந்த 1991-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு வரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 432 பணியாளர்களை இந்தத் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில், காவலர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டேன். குறுகிய காலத்துக்குள்ளே 15 ஆயிரத்து 621 பேர் பல்வேறு சீருடைப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் ஆயுதப் படைக்கு 6 ஆயிரத்து 4 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2 ஆயிரத்து 564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4 ஆயிரத்து 567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை சிறை வார்டன்களும், 36 பெண் வார்டன்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறைக்கு ஆயிரத்து 491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 621 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு திருநங்கைகள்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக காவல் துறைக்கு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், இப்போது 4 திருநங்கைகள் காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காலிப் பணியிடங்களே...:
மேலும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு உரியவர்கள், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதன் மூலம் தமிழக காவல் துறையில் காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு: இந்தியாவிலேயே முதன் முறையாக 1992-ஆம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. தமிழக காவல் துறையின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பெண் காவலர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமையை பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான். இதனால், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன.
தமிழக காவல் துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல் துறையின் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டும். சிறப்பான தமிழக காவல் துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது உங்களுக்கும், உங்களைச் சேர்ந்தோருக்கும் பெருமை அளிப்பதாகும். 
இதனை எந்த நாளும் மனதில் கொண்டு உங்கள் பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும். சீருடைப் பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களுடைய பணியில் எந்தவித விருப்பு, வெறுப்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும்.
மக்களுடைய குறைகளைக் கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னலமற்ற சேவை காவல் பணியாகும். இப்படி உழைக்கும் போது அதனால் மக்களிடையே ஏற்படும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை உங்கள் கண்முன்னே பார்க்கும் போது உங்களுக்குள் நிச்சயம் ஒரு பூரிப்பும், பெருமிதமும் ஏற்படும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், நிலோபர் கபில், பி.பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்ன் மார்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
2 திருநங்கைகளுக்கு முதல்வர் பணி நியமன ஆணை
காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 திருநங்கைகளில் இரண்டு பேருக்கு விழா மேடையிலேயே பணிக்கான உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்தார்.
பிரபா மோகன், தாட்சாயினி ஆகிய இரண்டு பேருக்கும் உத்தரவுகளை அவர் வழங்கினார். அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களைத் தவிர்த்து மேலும் 2 திருநங்கைகளுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
80 சதவீதம் பேர் கிராமத்தினர்: சீருடைப் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15,621 பேரின் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்து காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் பேசினார். அப்போது அவர், தேர்வு செய்யப்பட்ட 15,000 பேரில் 80 சதவீதம் பேர் முற்றிலும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், 20 சதவீதம் பேர் மட்டுமே நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். தேர்வு முறைகள் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வரவேற்றுப் பேசினார். சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜே.கே.திரிபாதி நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com