அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

மாநில அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் நலம் விசாரித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பெஞ்சமின், கே.பாண்டியராஜன். உடன், எம்.பி.,வேணுகோபால், ஆட்சியர் எ.சுந்தரவல்லி
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் நலம் விசாரித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பெஞ்சமின், கே.பாண்டியராஜன். உடன், எம்.பி.,வேணுகோபால், ஆட்சியர் எ.சுந்தரவல்லி

மாநில அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு, நலம் விசாரித்தார். 
அப்போது, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். பின்னர், பச்சிளங்குழந்தைகள் சிறப்புப் பிரிவுக்கு சென்று, குழந்தை பெற்ற தாய்மார்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். 
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 245 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், டெங்கு உறுதி செய்யப்பட்ட 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் முன்னேற்பாடுகளால் கிராமங்களில் கடந்த வாரத்தை விட, தற்போது டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. 
இதை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, தொடர்ந்து 7 நாள்கள் கட்டாயம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை மையம்: காய்ச்சல் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள மாநில அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்களை கண்டறிய நகரங்களுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. இதை தவிர்த்து கிராம அளவில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 857 நவீன செல் கவுன்ட்டர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் காய்ச்சலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: தற்போது, அரசு மருத்துவமனைகளில் 1,013 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 64 சிறப்பு மருத்துவர்கள், 744 மருத்துவர்கள், 2 ஆயிரம் செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
இதேபோல், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன் பணியிடங்களை முதல்வர் காப்பீடு திட்ட நிதியில் நியமனம் செய்து கொள்ளும் வகையில் 22 மருத்துவக் கல்லூரி டீன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனறார்.
இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். 
இக்கூட்டத்தில், திருவள்ளூர் எம்.பி., வேணுகோபால், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஆட்சியர் எ.சுந்தரவல்லி, எம்எல்ஏக்கள் பலராமன்
(பொன்னேரி), பி.எம்.நரசிம்மன்(திருத்தணி), விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி), சுகாதாரத்துறை (நோய் தடுப்பு பணிகள்) இயக்குநர் குழந்தைசாமி, திருவள்ளூர் மாவட்ட டெங்கு நோய் தடுப்பு அலுவலர் வேல்முருகன், மருத்துவக் கல்வி துறை இயக்குநர் எட்வின் ஜோன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com