இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: அக்.23-க்கு விசாரணை ஒத்திவைப்பு

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணையை அக். 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ஒத்தி வைத்தது. 
இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: அக்.23-க்கு விசாரணை ஒத்திவைப்பு

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணையை அக். 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ஒத்தி வைத்தது. 
இந்த விவகாரம் தொடர்பான பொது நல மனுவை அண்மையில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவின் எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை அக்டோபர் 6-ஆம் தொடங்கியது. அப்போது, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தங்களுக்கே கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தரப்பில் கூட்டாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைக்க விசாரணை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, டி.டி.வி. தினகரன் தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை அக். 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
விசாரணை தொடக்கம்: இந்நிலையில், இது தொடர்பான விசாரணை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி. ராவத், சுனில் அரோரா ஆகியோர் அடங்கிய முழு ஆணையம் முன்பாக திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடங்கியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், கே.வி. விஸ்வநாதன், குரு கிருஷ்ண குமார் ஆகியோர் ஆஜராகினர். டிடிவி தினகரன் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான அஸ்வினி குமார், வழக்குரைஞர் விஜய் அன்சாரியா, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்குரைஞர் விஜய் அன்ஸாரியா வாதிடுகையில், 'ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் செப்டம்பர் 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் நம்பகத்தன்மை இல்லை. பிரமாணப் பத்திரங்களில் உள்ள முறைகேடு தொடர்பாக எங்கள் தரப்பில் உள்ள 6 சாட்சியங்கள் மூலம் நிரூபிக்க முடியும்' என்று கூறினார். 
இதற்கு தேர்தல் ஆணையம், 'எழுத்துப்பூர்வ வாதங்களை மட்டுமே பரிசீலிப்போம். நபர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி இல்லை' என தெரிவித்தது. 
டிடிவி தினகரன் வழக்குரைஞரின் கருத்துக்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், 'அதிமுக பொதுக் குழுவின் 1877 உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் அவை போலியானவை, முறைகேடுகள் உள்ளன எனக் கூறுகின்றனர். 
ஆவணங்களில் முறைகேடு உள்ளது என்றால் அது தொடர்பாக காவல் நிலையத்தில் இதுவரை ஏன் புகார் அளிக்கப்படவில்லை? இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்கவே திமுகவும், காங்கிரஸும் விரும்புகின்றன' என்றார். 
இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் சார்பில் அஸ்வினி குமார் வாதிடுகையில், 'தேர்தல் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே சட்டத் தீர்வு காணப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. அஇஅதிமுக சட்ட விதிப்படி பொதுச் செயலாளருக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவை அடிப்படையாக கொண்டு இரட்டை இலைச் சின்ன விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டும்' என்றார். 
இதைத் தொடர்ந்து மீண்டும் சி.எஸ். வைத்தியநாதன் தனது வாதத்தில், 'இரட்டை இலைச் சின்ன விவகாரத்துக்கு விரைவில் தீர்வு ஏற்படக் கூடாது என்ற நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1877 பிரமாணப் பத்திரங்களையும் அவர்கள் எதிர்க்கவில்லை. 6 பிரமாணப் பத்திரங்களுக்கு எதிராக மட்டுமே வாதம் செய்து வருகின்றனர்' என்றார். டிடிவி தினகரனுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறிப்பிட்டபோது, சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தேர்தல் ஆணையம், விசாரணை அக். 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவித்தது. 
முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது டிடிவி தரப்பில் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்தம், உதயகுமார், கோகுல கிருஷ்ணன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், நெல்லை மாவட்ட செயலாளர் முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மூத்தத் தலைவர் மனோஜ் பாண்டியன், எம்பிக்கள் மைத்ரேயன், வனரோஜா, அசோக்குமார், ஏழுமலை, பி.ஆர். சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com