காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரையே பட்டாசு வெடிக்கலாம்: சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னையில் தீபாவளி தினமான புதன்கிழமை (அக். 18) காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் தீபாவளி தினமான புதன்கிழமை (அக். 18) காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: 
தீபாவளியன்று உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 89-ன் படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.
பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடத்தில் வெடிக்க வேண்டாம். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் நிலையங்கள் அருகேயும், மருத்துவமனைகள் அருகேயும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கவும்.
பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசுகள் அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குடிசை பகுதிகளிலும், மாடிக் கட்டடங்கள் அருகிலும், ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.
குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்: எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையின் அடுப்படியில் வைத்து உலர்த்தக் கூடாது. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக்கூடாது. பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகை பிடிப்பதோ, சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது. பட்டாசு விற்கும் கடைகள் அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
பட்டாசு வியாபாரிகள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ, சிம்னி விளக்குகளையோ கடையிலேயோ அல்லது கடைக்கு அருகிலேயோ பயன்படுத்தக் கூடாது.
எச்சரிக்கை உணர்வு தேவை: கால்நடைகள் அருகில் பட்டாசுகளை வெடித்தல் கூடாது. ஏனெனில் அவை பயத்தின் காரணமாக மிரண்டு ஓடும்போது, வாகன ஓட்டுனர்கள் மீது மோதி விபத்து ஏற்படலாம். பொதுமக்கள் பட்டாசுகளை, எச்சரிக்கை உணர்வுடன் வெடிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com