டெங்கு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துங்கள்!: அரசுக்கு மத்திய வல்லுநர் குழு அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய வல்லுநர் குழு அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய வல்லுநர் குழு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 40 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் சார்பில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் அக்டோபர் 13 -ஆம் தேதி தமிழகம் வந்தனர். 
அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், அரசு - தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தனர். 
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள பொதுமக்களிடம் அந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அதன் பிறகு மத்திய குழுவினர் அக்டோபர் 14 -ஆம் தேதி புதுச்சேரி சென்றனர். புதுச்சேரியில் ஆய்வு முடித்த அந்தக் குழுவினர் திங்கள்கிழமை (அக்.16) மீண்டும் சென்னை வந்தனர். தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பிறகு சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. இருப்பினும், பருவ மழை தொடங்கவுள்ளதால் இப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தொடக்க நிலையிலேயே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். வாரந்தோறும் வியாழக்கிழமை டெங்கு கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவது நல்ல முயற்சி. ஞாயிற்றுக்கிழமையிலும் இந்தப் பணியை மேற்கொள்ளலாம் என்று மத்திய மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். 
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசிடம் ரூ.256 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. கூடுதலாக 2,000 செவிலியர்கள், 1,240 சுகாதார ஆய்வாளர்கள், கூடுதல் மருந்துகள், புகைத் தெளிப்பான் கருவிகள் போன்றவற்றையும் கோரியுள்ளோம். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 40 பேரும், பிற காய்ச்சல்களால் 80 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றார் அவர்.
மத்திய வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள, தேசிய தொற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் இணை இயக்குநர் டாக்டர் கல்பனா பரூவா கூறியது: தமிழகத்தில் சென்னை, சேலத்தில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் உள்ளது. ஆனால் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. கொசு உற்பத்தியாகும் இடங்கள் தெரிந்திருந்தும், அதனை ஒழிக்கும் முறைகளை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.
நிதி ஒதுக்கீடு... காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் தற்போது எடுக்கப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் டெங்கு காய்ச்சல் சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை நாங்கள் சமர்ப்பித்த பின்னர் தமிழக அரசு கோரியுள்ள நிதி ஒதுக்கீடு குறித்து நிதித் துறை முடிவு செய்யும் என்றார் அவர்.
இன்று அறிக்கை தாக்கல்: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை மத்திய குழுவினர், மத்திய அரசிடம் செவ்வாய்க்கிழமை (அக்.17) சமர்ப்பிக்க உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com