தமிழகத்தில் மும்மொழி பாடத்திட்டமா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்

மும்மொழி பாடத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் மும்மொழி பாடத்திட்டமா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்

மும்மொழி பாடத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவது, ஹிந்தி மொழி வளர்ச்சிக்குப் பிற இந்திய மொழிகளைவிட அதிக நிதியைச் செலவிடுவது என ஹிந்தித் திணிப்புக்காகத் தொடர்ந்து பல்வேறு செயல்திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த மறைமுக ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காக்க வேண்டிய தமிழக அரசு, தமிழகப் பள்ளிகளில் வரும் 2018-19 கல்வியாண்டில் மும்மொழி பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
மத்திய அரசின் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் வழங்கியுள்ள மும்மொழி பாடத் திட்ட ஆலோசனைகளை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்கள், தாய்மொழி மீது ஆதிக்கச் சக்திகள் படையெடுத்துள்ள ஆபத்தினை அறிவித்துள்ளன.
அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களும் தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் தந்து, ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு ஹிந்தி ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் மும்மொழிக் கொள்கைக்கு வரவேற்பு அளிக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஹிந்தி பிரசார சபா அமைப்பின்கீழ் ஏராளமான கிளைகள் உள்ளன. அதன் மூலமும், பிற தனியார் அமைப்புகள் மூலமும் ஹிந்தி மொழி கற்பிக்க எந்தத் தடையும் இல்லை. இதனை மீறி அரசு பள்ளிகள் மூலம் ஹிந்தியைத் திணிக்க நினைக்கும் மத்திய அரசின் கெடுபிடிகளையும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கும் தமிழக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com