பட்டாசு விபத்து: 10 நிமிஷத்தில் நிகழ்விடத்துக்கு செல்லத் தயாராகும் தீயணைப்புத் துறை

பட்டாசு தீ விபத்துகளால் உண்டாகும் சேதங்களை கூடுமானவரை குறைக்கும் வகையில், தீபாவளி தினத்தன்று சென்னையில் தீ விபத்து ஏற்படும் இடங்களுக்கு 10 நிமிஷங்களுக்குள் செல்ல
பட்டாசு விபத்து: 10 நிமிஷத்தில் நிகழ்விடத்துக்கு செல்லத் தயாராகும் தீயணைப்புத் துறை


 50 புற தீயணைப்பு நிலையங்கள் அமைப்பு
 பட்டாசு தீ விபத்துகளால் உண்டாகும் சேதங்களை கூடுமானவரை குறைக்கும் வகையில், தீபாவளி தினத்தன்று சென்னையில் தீ விபத்து ஏற்படும் இடங்களுக்கு 10 நிமிஷங்களுக்குள் செல்ல தீயணைப்புத் துறை தயாராகி வருகிறது. மேலும் கோவை, சேலம் உள்ளிட்ட 50 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளியின்போது பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளால் உண்டாகும் சேதத்தைக் குறைப்பதற்கு, இந்த ஆண்டும் தீயணைப்புத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கியமாக பட்டாசு விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு 10 நிமிஷங்களுக்குள் செல்வதற்கு தீயணைப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னையில் 39 தீயணைப்பு நிலையங்களைத் தவிர்த்து 50 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 
கடந்த ஆண்டுகளில் அதிகப்படியான தீ விபத்துகள் ஏற்பட்ட பகுதிகள், மக்கள் நெரிசல் மற்றும் தீ விபத்து ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிக இருக்கும் பகுதிகளில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இத்துடன், கோவையில் 5 இடங்களிலும், சேலம், திருப்பூர், ஈரோட்டில் தலா 2 இடங்களிலும் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு தலா ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 24 மணி நேரமும் 15 தீயணைப்பு வீரர்கள் பணியில் இருப்பர். இந்தத் தீயணைப்பு நிலையங்கள் செவ்வாய்க்கிழமை (அக்.17) தொடங்கி 4 நாள்கள் செயல்படும்.
மோட்டார் சைக்கிளில்... இவை தவிர, சிறியதாக ஏற்படும் தீயை அணைக்கவும், பெரிய தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு உடனடியாக சென்று தீயை கட்டுப்படுத்தவும் ஜீப் வடிவிலான நான்கு தீயணைப்பு வாகனங்களும், 8 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
தண்ணீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் 50 தண்ணீர் லாரிகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் தலா 4,000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டவையாகும்.
வெளி மாவட்ட வீரர்கள்: சென்னையில் சுமார் 1,000 தீயணைப்பு படை வீரர்கள் பணியில் இருக்கும் நிலையில், கூடுதலாக 20 ஓட்டுநர்கள் உள்பட 500 தீயணைப்பு படை வீரர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுவதாக தீயணைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறையில்... தீ விபத்து குறித்த தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள வசதியாக, சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் 2 தீயணைப்பு படை வீரர்களும், அதேபோல தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறையில் 2 காவலர்களும் பணியில் இருப்பர். இவர்கள் மூலம் இரு துறைகளிடமும் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். 
அதேபோல், அரசு பொதுமருத்துவமனையில் தீ விபத்தில் காயமடைந்தோர் பற்றிய தகவல்களை உடனடியாகப் பெற அனைத்து மருத்துவமனைகளிலும் தீயணைப்பு படை வீரர்கள் இருவர் பணியில் இருப்பார்கள் என தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனடியாகச் செல்ல...இதுதொடர்பாக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' தீ விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்தை நாங்கள் 10 நிமிஷங்களுக்குள் அடைவதற்கு திட்டமிட்டுள்ளோம். நாங்கள் எவ்வளவு விரைவாக சம்பவ இடத்தை அடைய முடியுமோ, அந்த அளவுக்கு விபத்தின் சேதத்தைக் குறைக்க முடியும் என்பதால், விபத்து குறித்த தகவல் பரிமாற்றத்தில் எந்த விதத்திலும் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்' என்றார் அவர்.
தீவிர கண்காணிப்பில் எல்லையோர மாவட்டபட்டாசு கிடங்குகள்
தீபாவளி பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகள், கிடங்குகள் ஆகியவற்றுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும் அனுமதி பெற்ற பின்னர் பட்டாசு கடை நடத்துபவர்களும், கிடங்குகளின் உரிமையாளர்களும் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதால் கடந்த காலங்களில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய தீ விபத்துக்கள் ஏற்பட்டன.
முக்கியமாக கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களையொட்டியுள்ள மாவட்டங்களில் இருக்கும் பட்டாசு கிடங்குகள், விதிமுறைகளை மீறி பட்டாசுகளை விற்பனை செய்து விபத்தில் சிக்குவது தொடர் நிகழ்வாகி வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, வேலூர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் எல்லையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கிடங்குகள், கடைகள் ஆகியவற்றை வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகள் தங்களது தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டு வந்துள்ளன.

ராக்கெட் வகை பட்டாசுகளும், தீ விபத்துகளும்
தீபாவளி பண்டிகையில் பிரதான கொண்டாட்டமாக இருப்பது பட்டாசு வெடிப்பதுதான். அண்மைக்காலமாக தரையில் இருந்து வானில் சென்று வெடிக்கும் ராக்கெட் வகை பட்டாசுகளை வெடிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்த வகை பட்டாசுகளினாலேயே 90 சதவீத தீ விபத்துகள் ஏற்படுவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ராக்கெட் பட்டாசுகளைப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெடிப்பதாலும், குறுகலான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளில் வெடிப்பதாலும் தீ விபத்துகள் அதிகம் ஏற்படுவதாகவும், எனவே இந்த வகை பட்டாசுகளை கூடுதல் கவனத்துடன் வெடிக்க வேண்டுமென்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com