அரசு மருத்துவமனை முன் பெண் குழந்தை மாயமான வழக்கு: கடத்திச் சென்று விற்ற 5 பேர் கைது

மதுரை அரசு மருத்துவமனை முன் மாயமான பெண் குழந்தையை கடத்திச் சென்று விற்ற 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனை முன் மாயமான பெண் குழந்தையை கடத்திச் சென்று விற்ற 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
மதுரை சக்கிமங்கலம் கல்மேடு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த வானவராயன், சிவகாமி ஆகியோரின் இரண்டாவது மகள் பவித்ரா (3), மதுரை அரசு மருத்துவமனை முன் கடந்த மே 19-ஆம் தேதி மாயமானார். இதுதொடர்பாக மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் காவல் துணை ஆணையர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெய்ட்டான்பட்டியைச் சேர்ந்த பரமன் என்ற சர்க்கரையின் மனைவி மீனாவுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரைத் தேடிச் சென்ற போது தலைமறைவாகி விட்டார். பின்னர் குழந்தை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மீனாவின் மகனிடம் விசாரித்த போது, மீனா, அவரது உறவினர் ஜனனி (21) ஆகிய இருவரும், சம்பவத்தன்று மதுரை பாண்டி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் வழியில் மதுரை அரசு மருத்துவமனை முன் விளையாடிக் கொண்டிருந்த பவித்ராவை கடத்திச் சென்றது தெரியவந்தது. 
பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்த சமுத்திரம் (81), திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சாம்பவார் வடகரையைச் சேர்ந்த பொன்னுத்தாய் (69) ஆகியோர் மூலம், சாம்பவார் வடகரை வடக்கு கடைசி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிகளான சேர்மத்தங்கம் (30), ராமர் (35) ஆகியோருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்து, அத்தொகையை 5 பேரும் பங்கு போட்டதும் தெரிந்தது.
இதையடுத்து குழந்தை பவித்ராவை தனிப்படையினர் தென்காசியில் மீட்டனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மீனா மற்றும் அவரது மகன், ஜனனி, சமுத்திரம், பொன்னுத்தாய் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். குழந்தையை வாங்கிய தம்பதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை நகரில் தற்போது வரை குழந்தைகள் மாயமானதாக 8 புகார்கள் உள்ளன. இவற்றையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்றார். 
இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தை பவித்ரா, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது காவல் துணை ஆணையர் சசிமோகன்(சட்டம்- ஒழுங்கு) மற்றும் தனிப்படையினர் உடனிருந்தனர். 

உயர்நீதிமன்றம் விதித்த கெடுவால் குழந்தையை கண்டுபிடித்த போலீஸார்

செய்தியாளர் சந்திப்பில் காவல் ஆணையர் கூறும் போது, குழந்தை மே 19-ஆம் தேதி மாயமானதாகவும், புகாரின் பேரில் மே 22-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். ஆனால் குழந்தை மே 5-ஆம் தேதி மாயமாகி உள்ளது. உடனடியாக புகார் அளித்தும் மதிச்சியம் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் குழந்தையை கண்டுபிடித்து தர போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, குழந்தையின் தாய் சிவகாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதிச்சியம் போலீஸார் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே போலீஸார் தனிப்படை அமைத்து குழந்தையை கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com