டெங்கு குறித்து மத்திய குழுவினர் முறையாக ஆய்வு செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய வல்லுநர் குழுவினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெங்கு குறித்து மத்திய குழுவினர் முறையாக ஆய்வு செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய வல்லுநர் குழுவினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு மைற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 56 குழந்தைகள் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 26 குழந்தைகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மகப்பேறு மருத்துவமனையில் 5 கர்ப்பிணிகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 
தமிழகம் ஒரு டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால், இந்தளவு மோசமான சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய வல்லுநர் குழு டெங்கு காய்ச்சல் என்பது ஒரு சாதாரண விஷயம். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ பொறுப்பேற்க முடியாது என்று அலட்சியமாகத் தெரிவித்துள்ளனர்.
அந்தக் குழுவின் ஆய்வால் எந்தப் பயனும் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. காரணம், அந்தக் குழுவினர் முறையான ஆய்வு எதையும் செய்யவில்லை.
டெங்கு பாதிப்பு எங்கு இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. பொத்தாம் பொதுவாக தவறான தகவலை வெளியிடும் அளவுக்குத்தான் வந்து சென்றார்கள். 
டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ள நிலையில், 40 பேர் மட்டும்தான் இறந்ததாக தமிழக அரசு தவறான தகவலை அளித்து வருகிறது. மேலும், டெங்கு காய்ச்சலால் இறந்தவர்கள் என்று யாருக்கும் சான்று கொடுக்கக்கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என்ற தவறான ஒரு தகவலைத் திட்டமிட்டு இந்த அரசு பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது.
டெங்குவை முன்கூட்டியே தடுக்கும் முயற்சியைத் தவறவிட்ட இந்த அரசு, தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்போரைக் காப்பாற்றும் பணியிலாவது முறையாக ஈடுபட வேண்டும் என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com