புதுவையில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு: அரசு உத்தரவு

புதுச்சேரியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, புதுச்சேரி அரசுப் போக்குவரத்து ஆணையர் எஸ்.டி.சுந்தரேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுச்சேரியில் புதிய பேருந்து கட்டணங்களை நிர்ணயம் செய்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட ஆட்சிப்பரப்பில் இயக்கப்படும் நிலை நிறுத்தப் பேருந்துக் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி பல்நோக்கு போக்குவரத்து குழுமத்தின் (டிஐஎம்டிஎஸ்) புதுச்சேரிக்கான வழிகாட்டு நெறியான விரிவான போக்குவரத்துத் திட்டத்தில் (சிஎம்பி) குறிப்பிட்டுள்ளபடி நிலை நிறுத்தப் பேருந்துகளுக்கான கட்டணத்தை புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை மறுநிர்ணயம் செய்துள்ளது. அதில் பேருந்து இயக்கத்தின் பல்வேறு கூறுகள், காரணிகளை கணக்கில் கொண்டு பேருந்து கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.
நகரப் பேருந்து: அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள் இயக்கப்படும் நகர சேவை பேருந்துகளுக்கு முதல் நிலை ரூ. 5-க்கு மிகாமல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஒவ்வொரு நிலைக்கும் ரூ. 2-க்கு மிகாமல் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நிலை என்பது 3 கி.மீ. தொலைவு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ரூ.3 இல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.8. 
விரைவுப் பேருந்து அல்லாத நிலை நிறுத்தப் பேருந்துகள்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள் இயக்கப்படும் நிலை நிறுத்தப் பேருந்துகளுக்கு முதல் 6 கி. மீ வரையில் உள்ள தூரத்துக்கு ரூ. 8க்கு மிகாமல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ. 0.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.4.50 என இருந்தது, தற்போது ஒவ்வொரு கூடுதல் கி.மீட்டருக்கும் 40 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 
விரைவுப் பேருந்துகள்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளுக்கு முதல் 25 கி.மீ. வரையான தொலைவுக்கு ரூ. 25க்கு மிகாமல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒவ்வொரு கி. மீட்டருக்கும் ரூ. 0.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி, இரவு சேவைப் பேருந்துகள்: குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகள் ஒவ்வொரு வகைக்கும் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சாதாரணப் பேருந்து கட்டணத்தைப் போல இரு மடங்காகும். ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் சேர்க்கப்படும். 
நகரப் பகுதிகளில் இரவு நேர பேருந்து சேவைக்கும் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நகரப் பகுதியில் இயக்கப்படும் இரவு சேவை நகரப்பேருந்துகளுக்கு, நகரப் பேருந்து கட்டணத்தைப் போல இரு மடங்கு கட்டணமாகும்.
மேற்படி கட்டணத்துடன் அவ்வப்போது மாற்றத்துக்குள்பட்டு அரசு நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி கட்டணமும் அதற்குரிய பேருந்துகளில் வசூலிக்கப்படும். புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப்பரப்பில் அல்லாது மற்ற மாநில சாலைகளில் பேருந்துகள் இயக்கப்படும் பொழுது அத்தகைய தொலைவுக்கு அந்த மாநிலம் நிர்ணயம் செய்துள்ள பேருந்து கட்டணமே வசூல் செய்யப்படும்.
புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பேருந்துக் கட்டணம் புதுச்சேரி அரசின் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
40 சதவீதம் உயர்வு
புதுச்சேரியில் கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு பேருந்துக் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 கி.மீ. தொலைவுக்கு ஒரு நிறுத்தம் என்றிருந்தது, தற்போது 3 கி.மீ. தொலைவுக்கு ஒரு நிறுத்தம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டுளளது.
குறிப்பாக எரிபொருள் விலை உயர்வு, பேருந்து உதிரி பாகங்கள், பராமரிப்புச் செலவுகள் உயர்ந்துள்ளதால் இக்கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com