மன இருள் அகலட்டும்...! பங்காரு அடிகளார் தீபாவளி வாழ்த்து

தீப ஒளித் திருநாளில் மக்களின் மன இருள் அகலட்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளார் கூறியுள்ளார். 
மன இருள் அகலட்டும்...! பங்காரு அடிகளார் தீபாவளி வாழ்த்து

தீப ஒளித் திருநாளில் மக்களின் மன இருள் அகலட்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளார் கூறியுள்ளார். 
அவரது வாழ்த்துச் செய்தி:
தீபாவளி என்பது ஒரு ஒளி விழா. இல்லத்தில் தீபங்கள் ஏற்றி இருளை அகற்றுவது போல, உள்ளத்திலும் அன்பு ஒளியையும், அறிவு ஒளியையும், ஆன்மிக ஒளியையும் ஏற்றி மன இருளை அகற்றும் விழாவாக தீபாவளி இருக்க வேண்டும். உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து உற்சாகத்தையும், அன்பையும் பரிமாறிக் கொள்வது போல நம்மை சுற்றியுள்ள ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை கொடுத்து அவர்கள் உள்ளத்திலும், உற்சாகத்தையும், அன்பையும் பரிமாறிக் கொள்ளும் விழாவாக இந்த தீபாவளி இருக்க வேண்டும். 
அனைவரும் தங்கள் தாய், தந்தையரை மதித்து வணங்க வேண்டும். அவர்களது மன மகிழ்ச்சியினால் வருகிற ஆசி பிள்ளைகள் வாழ்வுக்கு அரணாக இருக்கும். பெற்றோர் மனம் புண்பட்டால் பிள்ளைகள் வாழ்வு பண்படாது. சென்ற ஆண்டு மழை வளம் இல்லாதநிலை இருந்தது. 
இயற்கை பொய்த்ததால் வாழ்க்கை பொய்த்து விடும் என்பதை உணர வேண்டும்.இயற்கையை இறைவனாக பார்க்க வேண்டும். இயற்கை இல்லையேல் வாழ்க்கையில் எதுவும் இல்லை. இயற்கையை எந்த விஞ்ஞானத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. விஞ்ஞானத்தில் மிக மிக உச்சநிலையை அடைந்த நாடுகள் கூட, இயற்கையின் சீற்றத்துக்கு எதிராக தங்கள் விஞ்ஞானத்தைக் கொண்டு அழிவுகளை தடுத்து நிறுத்த இயலவில்லை. விஞ்ஞான முன்னேற்றம் உச்சம் தொட்டபோதும், மனிதர்கள் வாழ்வில் அச்சம் நீங்கவில்லை.நமது எதிர்காலம் என்ன? என்ற பயம் பலரது மனதையும் ஆட்டுவிக்கிறது. பாதுகாப்பு உணர்வு நீங்கிய நிலையில் இன்றைய விஞ்ஞானம் மனிதனை வைத்திருக்கிறது. இவற்றில் இருந்து விடுபட மெய்ஞானம் தேவை. உள்ளத்தை வெள்ளையாக்கி மனதை கட்டுப்படுத்தி ஒழுக்கத்தை கடைப்பிடித்து உண்மையான உள்ளன்பையும், பாசத்தையும், தர்மத்தையும் பொழுது விஞ்ஞானத்தில் கட்டுப்படாதது கூட, மெய்ஞானத்தினால் கட்டுப்படும். வியாபாரம் பெருக்கினால் மட்டும் போதாதது. விவசாயம் பெருக வேண்டும். விவசாயம் குறைவின்றி நடக்க இயற்கையின் ஒத்துழைப்பு அவசியம். மண்ணை அளவிற்கு மேல் தோண்டுவதும், காற்றிலே மாசு உண்டாக்குவதும், நீர்நிலைகளை அழுக்காக்குவதும், காடுகளை அழிப்பதும் இயற்கைக்கு இன்னல் தரும் செயல்கள். இதன் விளைவு இயற்கை சீற்றங்கள்.இயற்கை சீற்றத்தை எந்த விஞ்ஞானத்தாலும்,தடுக்க முடியாது. அதிகமான இனிப்பு உடலுக்கு அதிக இன்னல் தருவது போல அதிகமான ஆசையும், அவலத்தையும் கொண்டு வரும். நம் தாய் தந்தையரையும் இயற்கையையும் அனைவரும் வழிபாடு செய்து வணங்கி வாழவேண்டும் என்பது தான் இந்த அம்மாவின்ஆசை. இந்த அம்மாவின் ஆசை நிறைவேறும்படி இந்த அமாவாசையன்று வரும் தீபாவளியையாவது ஒரு ஆரம்ப புள்ளியாகக் கொண்டு அன்பு, பாசம், பண்பு, நேசம் வளர்த்து அனைவரும் மன அமைதியும், மனநிம்மதியும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com