நிலவேம்பு குறித்து தவறான தகவல்: கமலைக் கைது செய்யக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவலைப் பரப்புவதாக கூறி, நடிகர் கமலைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்  கோ,ரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நிலவேம்பு குறித்து தவறான தகவல்: கமலைக் கைது செய்யக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

சென்னை: நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவலைப் பரப்புவதாக கூறி, நடிகர் கமலைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்  கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது.அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசும், பல தன்னார்வு நிறுவனங்களும் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதிலும் சமீப காலங்களில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெங்கு தடுப்புக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும்  பொதுமக்கள் அனைவரும் நிலவேம்பு கஷாயம் / குடிநீர் அருந்துவது சரியானது என்று அரசால் பரிந்துரைக்கப்படுகிறது. அதன் பொருட்டு பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிலவேம்பு கஷாயம் / குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. 

நடிகர் கமல்ஹாசனின் நற்பணி மன்ற உறுப்பினர்களும் மன்றத்தின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலவேம்பு கஷாயம் / குடிநீர்  வழங்கி வந்தனர். 

ஆனால் சமீப காலமாக நிலவேம்பு கஷாயம் / குடிநீர்  அருந்துவதன் மூலம் சில பக்க விளைவுகள் உண்டாவதாக சில ஆங்கில மருத்துவர்களாலும் (அலோபதி), தன்னார்வலர்களாலும் சமூக வலை தளங்களிலும் தொடர் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பான சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு கஷாய விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று தனது நற்பணி மன்ற ரசிகர்களுக்கு நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக நேற்று  'திடீர்' வேண்டுகோள் வைத்துள்ளார்.

கமலின் இந்த கருத்துக்களுக்கு குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும்  பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தேவராஜன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை இன்று காலை அளித்து இருக்கிறார். அதில் அவர் நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவலை நடிகர் கமல் பரப்பி வருகிறார். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். எனவே தவறான தகவலை பரப்பும் நடிகர் கமலைக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பினைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com