தமிழகத்தில் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு கடும் சரிவு

தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை 60 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,000 கோடிக்கு நடைபெற்ற பட்டாசு விற்பனை இந்த ஆண்டு ரூ.400 கோடியாகக் குறைந்துள்ளது. 
தமிழகத்தில் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு கடும் சரிவு

தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை 60 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,000 கோடிக்கு நடைபெற்ற பட்டாசு விற்பனை இந்த ஆண்டு ரூ.400 கோடியாகக் குறைந்துள்ளது. 
தீபாவளி பண்டியை முன்னிட்டு, இந்த ஆண்டு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட தாற்காலிக பட்டாசுக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. வெடி பொருள்கள் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றுவதாலும் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும் தகுதியான கடைகளுக்கு மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுக் திறக்க அனுமதிப்பட்டது.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில்... சென்னை தீவுத்திடலில் 60 கடைகள், ராயப்பேட்டையில் 5 கடைகள், நந்தம்பாக்கத்தில் 4, கோயம்பேட்டில் 15 கடைகள் உள்பட 200 கடைகளும் புறநகரில் 300 கடைகள் உள்பட 900-க்கும் அதிகமான கடைகளில் கடந்த 5-ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை நடைபெற்றது. தீபாவளிக்கு முந்தைய இரு நாள்களில் நள்ளிரவு ஒரு மணி வரை விற்பனை நடைபெற்றது.
பட்டாசு விற்பனை சரிவு: கடந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு நடந்த பட்டாசு விற்பனை 60 சதவீதம் வரை சரிந்து இந்த ஆண்டு ரூ.400 கோடிக்குத்தான் நடந்ததாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். கடைகள் எண்ணிக்கையும் மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்ததுதான் இதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறியது: தமிழகத்தில் கடந்த ஆண்டு பட்டாசு விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜி.எஸ்.டி.யால் விலை உயர்ந்து இருக்குமோ என்ற மக்கள் மத்தியில் எழுந்த அச்சம், பணப்புழக்கம் குறைவு, மழை ஆகியவை விற்பனை குறைவுக்கு முக்கியக் காரணம். கடந்த ஆண்டைக் காட்டிலும் பட்டாசு விலை குறைந்திருந்தாலும், மக்களிடம் வாங்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு தீபாவளி, பட்டாசு விற்பனை முடிந்த பிறகே ரூபாய் மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவை நடைமுறைக்கு வந்ததால் பட்டாசு விற்பனையில் அவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால், இந்த ஆண்டு உயர்மதிப்பு ரூபாய் நோட்டு இழப்பு, ஜி.எஸ்.டி. நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களைப் பாதித்துள்ளது. இதுதான் பட்டாசு விற்பனை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். கடந்த ஆண்டு ரூ.50,000-த்துக்கு பட்டாசு வாங்கியவர் இந்த ஆண்டு ரூ.20,000-த்துக்குத்தான் பட்டாசு வாங்கினார். இதுபோலதான், பெரும்பாலான மக்கள் தங்கள் வாங்கும் சக்தி அளவைக் குறைத்துவிட்டனர் என்றனர் அவர்கள்.
தீவுத்திடலில் விற்பனை சரிவு: சென்னை தீவுத்திடலில் கடந்த ஆண்டு ரூ.15 ú காடி உள்பட மொத்தம் சென்னையில் ரூ.110 கோடி விற்பனை நடந்தது. இந்த ஆண்டு பாதிக்கு மேல் விற்பனை குறைந்து விட்டது. இருப்பினும் செலவு காரணமாக எல்லா வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு கடை அமைத்தல், ஊழியர்கள் சம்பளம் உள்பட ரூ.6 லட்சம் செலவாகும். ரூ.30 லட்சத்துக்கு பட்டாசு விற்பனை செய்தால்தான், செலவைச் சமாளிக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு விற்பனை மிகக் குறைவாக இருந்தது. இதனால், ஒவ்வொரு கடைக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தீவுத்திடலில் கடை அமைத்த வியாபாரிகளுக்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தீவுத்திடலில் கடை வாடகையை முறைப்படுத்த வேண்டும்: தீவுத்திடலில் கடை வாடகை கட்டணத்தை தமிழக சுற்றுலாத் துறை ஆண்டுதோறும் 30 சதவீதம் வரை உயர்த்தி வருகிறது. இது, இங்கு கடை அமைக்கும் பட்டாசு வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2011-இல் கடை வாடகை ரூ.23,000 ஆக இருந்தது. இப்போது, ரூ.1.25 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 300 சதவீதம் வரை வாடகையை அதிகரித்துள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும் என்று பட்டாசு வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியது: தீவுத்திடலில் கடைகள் அமைக்க பட்டாசு விற்பனை சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீதம் வரை வாடகை தொகையை அதிகரிக்கின்றனர். 
பந்தர் தெரு, பத்திரியன் தெரு, மலையபெருமாள் தெரு , ஆன்டர்சன் தெரு ஆகிய இடங்களில் 40 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தோம். எங்களை திறந்தவெளியில் கடை அமைக்கக் கூறி, தீவுத்திடலுக்கு செல்ல உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், தீவுத்திடலில் கடை அமைத்து வருகிறோம். இதற்காக, டெண்டர் அடிப்படையில், பட்டாசுக் கடைகளை சுற்றுலாத் துறை ஒதுக்குகிறது. ஆனால், ஆண்டுதோறும் டெண்டர் தொகை உயர்த்தப்படுவதால், எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, வாடகைக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com