தீபாவளி: அரசுப் பேருந்துகளில் வெளியூர்களுக்கு 5.5 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து 5,52,524 பேர் அரசுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
தீபாவளி: அரசுப் பேருந்துகளில் வெளியூர்களுக்கு 5.5 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து 5,52,524 பேர் அரசுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக, வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் வகையில், கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, தாம்பரம் சானட்டோரியம் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 5,52,524 பயணிகள் பயணம் செய்தனர்.
இவற்றில், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 7,029 பேருந்துகளில் மொத்தம் 3,47,203 பேர் பயணம் மேற்கொண்டனர். அண்ணா நகர் பேருந்து நிலையத்திலிருந்து 747 பேருந்துகள் இயக்கப்பட்டு 39,782 பயணிகள் பயணம் செய்தனர். 
இதேபோன்று, சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்பட்ட 833 பேருந்துகளில் 44,314 பயணிகள் பயணம் செய்தனர். தாம்பரம் சானட்டோரியத்திலிருந்து இயக்கப்பட்ட 667 பேருந்துகளில் 32,740 பயணிகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து 1,717 பேருந்துகள் இயக்கப்பட்டு 88,585 பயணிகளும் பயணம் மேற்கொண்டனர். 
ரூ.5 கோடி வருவாய்: சென்னையில் 5 இடங்களிலிருந்து மொத்தம் 10,993 பேருந்துகள் இயக்கப்பட்டுஅவற்றில் 5,52,624 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். 
இதில் சென்னையிலிருந்து 85,813 பயணிகள் உள்பட தமிழகம் முழுவதும் 1,50,201 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே ஒரு இலட்சத்து 43 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. 
சென்னை திரும்புவதற்கு...மேலும், தீபாவளி முடிந்து தமிழகம் முழுவதிலிருந்தும் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப, புதன்கிழமை (அக்.18) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (அக். 22) அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய ஒரு லட்சம் பயணிகள் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.3.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பிற நகரங்களில் இருந்து சென்னைக்குத் திரும்ப, வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் 446 சிறப்புப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை (அக்.20) 
இயக்கப்படும். இதேபோல் தமிழகம் முழுவதும் பிற நகரங்களுக்கு 1,300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com