மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளின் தேவையற்ற கட்டுபாட்டால் டெங்கு பரவல் அதிகரிப்பு?

மதுரை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் விதித்த தேவையற்ற கட்டுப்பாடுகளால் டெங்கு பரவல் அதிகரித்ததாக பணியாளர்கள் கூறுகின்றனர்.
மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளின் தேவையற்ற கட்டுபாட்டால் டெங்கு பரவல் அதிகரிப்பு?

மதுரை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் விதித்த தேவையற்ற கட்டுப்பாடுகளால் டெங்கு பரவல் அதிகரித்ததாக பணியாளர்கள் கூறுகின்றனர்.

மதுரை மாநகராட்சியில்  கடந்த 3 மாதங்களுக்கு முன்பே டெங்கு பரவல் தொடங்கியதும் கொசு ஒழிப்புப் பணிக்கு கூடுதல் பணியாளர்களை பயன்படுத்தவும்,  கொசு மருந்து தெளிப்பதை அதிகரிக்கவும் சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் எண்ணிக்கையைக் கூடுதலாக்கவும் சுகாதார ஆய்வாளர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

ஆனால், சுகாதார பிரிவில் உள்ள உயரதிகாரிகள் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்ததுடன், கூடுதல் மருந்து, டீஸல் வாங்க அனுமதிக்கவில்லையாம். மேலும்,  தற்போது 16 சுகாதார ஆய்வாளர்களே உள்ள நிலையில்,  டெங்கு ஒழிப்பு பணியைக் கண்காணிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் முன்வரவில்லையாம்.  இதனால், நகரில்   வழக்கமான கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால் டெங்கு பரவல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.  

தினமும் வில்லாபுரம், மீனாட்சிநகர், சோலையழகுபுரம்,  விளாங்குடி, கரிசல்குளம், புதூர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 60 பேர் வரை காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு டெங்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால்,  மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் கொசு ஒழிப்பு மருந்தை கூடுதலாக்கவும்,  டீஸல் அளவைக் கூடுதலாக்கவும் அனுமதிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.     டெங்கு பரவலை அறிந்த மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் எச்சரித்த பிறகே சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கொசு ஒழிப்பு மருந்து மற்றும் டீஸலை கூடுதலாக வாங்க அனுமதித்துள்ளனர்.  மேலும், கடந்த 15 நாள்களாகவே கூடுதல் மருந்துகளும் தெளிக்கப்பட்டுவருவதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியில் ஆணையருடன் சேர்ந்து தீவிரமாக ஈடுபட்டுவரும் உதவி நகர்நல அலுவலர்  கே.பார்த்திபனிடம் கேட்டபோது அவர் கூறியது:  மதுரையில் தற்போது தினமும் 40 லிட்டர் பைரித்ரம் மருந்தும், 760 லிட்டர்  டீஸலும் பயன்படுத்தப்பட்டு கொசு புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  வார்டுகள் தோறும் கொசு ஒழிப்பு பணியை  கண்காணிக்க, கூடுதலாக  100 பேர்  நியமிக்கப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்புக்காக ஏற்கெனவே 500 பேர் உள்ள நிலையில், தற்போது 200 பேர் கூடுதலாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பகுதிகளிலும்  கொசு மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது.  வீட்டினுள் மருந்து தெளித்தால் சுமார் 15 நிமிடங்கள் மூடிவைக்கவேண்டும். ஆனால் பொதுமக்கள் அதற்கு உடன்படுவதில்லை. இதனாலும் கொசு பரவல் அதிகரித்துள்ளது. தற்போது எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com