திரைப்படங்கள் மூலம் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பக் கூடாது: பொன். ராதாகிருஷ்ணன்

திரைப்படங்கள் மூலம் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
திரைப்படங்கள் மூலம் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பக் கூடாது: பொன். ராதாகிருஷ்ணன்

திரைப்படங்கள் மூலம் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில் முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: 
எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் ஜனநாயக அடிப்படையில் அரசியலுக்கு வர உரிமை உண்டு. ஆனால் தான் சார்ந்துள்ள துறையைத் தவறாகப் பயன்படுத்தி, தவறான விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டுவந்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது.
எம்.ஜி.ஆர். ஆரம்பத்திலிருந்தே திரைப்படத் துறையில் கவனம் செலுத்தியதுடன் அரசியலிலும் அதே அளவு கவனம் செலுத்தினார். மக்களில் ஒருவராக இருந்து தமிழக முதல்வரானார். 
அண்மையில் வெளிவந்துள்ள "மெர்சல்' திரைப்படத்தில் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருப்பது நல்லதல்ல. திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு, நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். மெர்சல் திரைப்பட தகவல்கள் உண்மைக்கு மாறான கருத்துகளைக் கொடுக்கும் வகையில் உள்ளது வருத்தத்துக்குரியது. வரி விதிப்பு தொடர்பான வசனங்கள் அப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. நம் நாட்டில் எப்படிப்பட்ட சூழல் உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். தவறான தகவல்களைப் பரப்பும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் அதுபோன்ற வசனங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமல், விஜய் அரசியலுக்கு வருவது தவறு என சொல்லமாட்டேன். ஓட்டுரிமை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். கமல் இன்று ஒன்று சொல்கிறார், பின்னர் நிலைமையை புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்கிறார். 
மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே நடைப்பயணம் செய்த பிறகும் தமிழக மக்கள் தி.மு.க.வை ஏற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதிக்கு மரியாதை இருந்தது. ஆனால் தி.மு.க. தொண்டர்களுக்கு மரியாதை இல்லை.
கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளத்திலிருந்து வெளியே சென்றால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றுதான் நான் கூறினேன். அவரது சொந்த ஊரில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் திருவனந்தபுரத்தில் 3 தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். தனது கட்சியினர் செய்யும் கொலைகளுக்கு அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளைப் பரப்புவதில் காங்கிரஸ் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது.
தொல்.திருமாவளவன்: மெர்சல் திரைப்படம் தணிக்கைத் துறையின் சான்றிதழைப் பெற்று வெளிவந்துள்ள நிலையில் தமிழக பாஜகவினர் படத்துக்கு எதிராகப் போராடுவதை நிறுத்திக் கொண்டு தணிக்கைத் துறையைக் கண்டித்துப் போராட வேண்டும். டெங்கு குறித்து ஆய்வு செய்வதற்காகத் தமிழகம் வந்த மத்தியக் குழுவின் நடவடிக்கைகள் கண் துடைப்பாகவே இருந்தன. 
கேரளத்தைப் போலவே தமிழகமும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காகப் பயிற்சி பெற்று காத்திருக்கும் 206 பேருக்கு உடனடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கவேண்டும். கேரளத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் ஜாதியற்றவர் என்று வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதைத் தமிழகமும் பின்பற்ற வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன்: நடிகர் விஜய் நடத்து வெளியாகியுள்ள மெர்சல் திடைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியையும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் விமர்சித்து காட்சி அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதை நீக்க வேண்டும் எனவும் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறியிருந்தார்.
ஹெச்.ராஜா அந்தத் திரைப்படத்துக்கு மதச் சாயம் பூசினார். நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன், மத்திய அரசை விமர்சித்தால் இந்துக்கள் மெர்சலாகிவிடுவார்கள் என மோதலை உருவாக்கும் வகையில் பேசியிருந்தார். இந்த மிரட்டல்கள் காரணமாக சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி விடுவதாகத் தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
பாஜகவின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. பொதுமக்களும், சமூக அமைப்புகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரம் பறிபோகும் அவல நிலை உருவாகியுள்ளது. ஆங்கிலேயர் காலம் முதல் இதுவரை ஆளும் கட்சிகளின் குறைகளைக் கலைத் துறையினர் நாடகங்கள், திரைப்படங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி, எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் தங்களது திரைப்படங்களில் ஆளும் கட்சிகளின் தவறுகளை நகைச்சுவையாக சுட்டிக் காட்டியுள்ளனர். காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சி செய்தபோதும் இதுபோல திரைத் துறையினர் சுட்டிக் காட்டத் தவறியதில்லை.
ஜி.எஸ்.டி.யால் சிறிய, நடுத்தர, குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும் பாதிப்பு அதிகம். ஆனால், மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. குறித்து நடிகர் விஜய் கூறிய கருத்துக்கு எதிர்க் கருத்து கூற தமிழிசைக்கு சுதந்திரம் உண்டு. ஆனால், விஜயை மிரட்டும் தொனியில் அவரது ஊதியம் குறித்துப் பேசுவது ஏற்புடையதல்ல. பாஜகவில் உள்ள சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி உள்ளிட்டோரின் ஊதியம் குறித்து தமிழிசை கேள்வி எழுப்புவாரா? என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com