நவ.7 முதல் மு.க.ஸ்டாலின் எழுச்சிப் பயணம்

தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நவ. 7-ஆம் தேதி முதல் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின்  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின்  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நவ. 7-ஆம் தேதி முதல் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிரசாரப் பயணத்தைத் துவக்கி வைக்க மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: 
நமக்கு நாமே பயணத்தைப் போல நவம்பர் முதல் வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். டிசம்பர் முதல் வாரத்தில் இந்தப் பயணம் முடிவடையும். பயணத் திட்டம் குறித்து முழுமையாக இன்னும் முடிவு செய்யவில்லை. மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி நான்கு நாள்களுக்குள் பயணத் திட்டம் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டும் இந்தப் பயணம் மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறுவதற்காகவும் இந்த பயணம் மேற்கொள்கிறேன் என்றார்.
7-ஆம் தேதி பயணம்: மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இருந்து நவ. 7-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளார். இதற்காக தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி, பிரகாஷ் காரத், டி.ராஜா போன்ற தேசிய தலைவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நவ. 6-இல் பிரதமர் சென்னை வருகை: தினத்தந்தியின் பவளவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு நவ. 6-ஆம் தேதி வர உள்ளார். அதற்கு அடுத்த நாள் நடைபெறும் விழா என்பதற்காகவும் பாஜகவுக்கும் எதிரான நிலைப்பாடு உள்ளவர்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காகவும் தேசியத் தலைவர்களை திமுக அழைக்கிறது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
சுகாதாரப் பேரிடர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியிலேயே 1,110 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், டெங்கு பாதிப்புக் குறித்துப் பார்வையிட வந்த மத்தியக் குழுவினர் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைத்து 40 பேர் இறந்தது பெரிய விஷயமில்லை என்று கூறியுள்ளனர். அதிமுக அரசு சிறப்பாகச் செயல்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரே பாராட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் மருத்துவ நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்து, மாநில அரசு கோரிய நிதி உதவியை அளிக்க வேண்டும். சுகாதாரப் பேரிடராகக் கருதி தமிழக மக்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
உரிமைகள் பறி கொடுக்கப்படுகின்றன: நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற தமிழக அரசு தவறிவிட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மானியமாக இழந்து, தமிழகத்தின் உணவு உரிமை பறிகொடுக்கப்பட்டு விட்டது. சரக்கு சேவை வரிக்கு ஆதரவு அளித்தது என ஆட்சியையும் பதவியையும் தக்க வைத்துக் கொள்வதற்காக மத்திய அரசிடம் தமிழக உரிமைகள் அனைத்து அதிமுக அரசு பறிகொடுத்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இனியும் எந்தவிதக் காரணமும் சொல்லி, காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
ஊழல் வழக்கு: உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் 30 சதவீதம் வரை ஊழல், குட்கா ஊழல், கிரானைட் ஊழல் என அனைத்து ஊழல்களுக்காகவும் அதிமுக ஆட்சியினர் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், கீதா ஜீவன் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். 

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் யார்?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: திமுக உள்கட்சித் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும். முடிந்த அளவுக்கு நியமனமாக இல்லாமல் தேர்தல் மூலமே அனைத்துப் பதவிகளுக்கும் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்சியினரிடையேயான பிரச்னைகளுக்கு மாவட்ட அளவிலேயே தீர்வு காண்பதற்கு முதலில் முயற்சிக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றால் திமுக எளிதாக வெற்றிபெற முடியும். அதற்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார். ஆர்.கே.நகரில் எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும் கடந்த முறை நிறுத்தப்பட்ட என்.மருதுகணேஷே வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com