நாகை அருகே அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை இடிந்து 8 பேர் சாவு

நாகை மாவட்டம், பொறையாறில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
இடிந்து விழுந்த பொறையாறு  அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதி.
இடிந்து விழுந்த பொறையாறு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதி.

நாகை மாவட்டம், பொறையாறில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம் கோட்டம்) பேருந்து கூண்டு கட்டும் பிரிவு மற்றும் போக்குவரத்துக் கழகப் பணிமனை நாகை மாவட்டம், பொறையாறில் அமைந்துள்ளது.
வியாழக்கிழமை இரவுப் பணியை முடித்த ஒருசில ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை பணிக்குச் செல்ல வேண்டிய ஓட்டுநர், நடத்துநர்கள் என 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிமனையின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பிரிவு கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். 
வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி மேற்கூரை மற்றும் முதல் தளத்தின் தரைத் தளம் ஆகியன முழுமையாக இடிந்து விழுந்தன. இதில் உறக்கத்தில் இருந்த ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த பொறையாறு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், போலீஸார் மற்றும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கிய பெரம்பூர் முனியப்பன் (41), புன்செய் சந்திரசேகர் (38), காளகஸ்தினாபுரம் பிரபாகரன் (53), பாலு (51), கிடங்கல் மணிவண்ணன் (52), பொறையாறு தனபால் (49), திருக்குவளை அன்பரசன் (25), ஆவராணி புதுச்சேரி ராமலிங்கம் (56) ஆகிய 8 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பொறையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
இறந்தவர்களில் ராமலிங்கம் நடத்துநராக பணிபுரிந்து வந்தார். மற்ற 7 பேரும் ஓட்டுநர்கள் ஆவர். உயிரிழந்த காளகஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பாலு, பிரபாகரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் ஆவர்.
3 பேர் காயம்: இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த நடத்துநர்கள் குருங்குளம் வெங்கடேசன் (42), மேலப்பெரும்பள்ளம் ஜெ. செந்தில்குமார் (37), திருத்துறைப்பூண்டி ஜி. பிரேம் குமார் (29) ஆகியோர் மீட்கப்பட்டு, உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.
குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஆறுதல்: விபத்தில் சிக்கி உயிரிழந்த ஊழியர்களின் வீடுகளுக்குச் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.
விபத்தில் காயமடைந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 3 ஊழியர்களையும் அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
முற்றுகையிடப்பட்ட ஆட்சியர்: 
நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், விபத்துக்குள்ளான பணிமனையைப் பார்வையிட்டு திரும்பியபோது, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
பணிமனை கட்டடத்தின் உறுதித்தன்மையை சோதித்து சான்றளித்த பொறியாளரை கைது செய்ய வேண்டும், பணிமனையை சீரமைக்கத் தவறிய நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.


பராமரிப்பு இல்லாத கட்டடம்

விபத்து நடந்த கட்டடத்தில் 1943-ஆம் ஆண்டில் சக்தி விலாஸ் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தனியாரால் பணிமனை தொடங்கப்பட்டு, 1974-ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டது.
பின்னர் சோழன் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. அப்போது தென் தமிழகத்தில் பேருந்துகளுக்கு கூண்டு அமைக்கும் முன்னணி பணிமனைகளில் ஒன்றாக விளங்கியது. சில காலத்திற்குப் பின்நர் இப்பணிமனையின் முக்கியத்துவம் குறையத் தொடங்கிய நிலையில், கட்டடப் பராமரிப்பில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
சுண்ணாம்பு கட்டுமானத்தையும், மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மேல்தளங்களுமே இன்றளவும் இந்தப் பணிமனையின் கட்டுமானங்களாக உள்ளன. 
தற்போது இப்பணிமனை, நாகை மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முக்கியப் பணிமனைகளில் ஒன்றாக உள்ள நிலையில், இதை சீரமைக்க வலியுறுத்தி பல முறை பல்வேறு தொழிலாளர் நல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வந்ததாகவும், ஆனால் இதுவரை தீர்வு காணப்படாமல் போனதால் இன்றைக்கு 8 பேர் உயிரிழப்பைச் சந்திக்க நேர்ந்துள்ளது என்று தொழிலாளர் தரப்பில் கூறுகின்றனர்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.7.5 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

நாகை மாவட்டம், பொறையாறு பேருந்து பணிமனை கட்டட விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். 
இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7.5 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.1.5 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். 
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com