"மெர்சல்' படத்தில் மருத்துவர்களைப் பற்றி தவறான காட்சிகள்: அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் மருத்துவர்களை பற்றி உண்மையற்ற, மலிவான  காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
"மெர்சல்' படத்தில் மருத்துவர்களைப் பற்றி தவறான காட்சிகள்: அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் மருத்துவர்களை பற்றி உண்மையற்ற, மலிவான  காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்:
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவர்களை பற்றி தவறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவர்கள் பற்றிய காட்சிகளில் சிறிதும் உண்மை இன்றியும், மிக மலிவான நோக்கத்தோடும் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் தற்போது டெங்கு பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மிகத்தீவிரமாக அர்ப்பணிப்பு உணர்வோடு டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான உயர்ந்த சிகிச்சை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகள் போலவே மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் நாட்டிலேயே  தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்தான் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் மகப்பேறு சிகிச்சைகள், குழந்தைகள் உயிர் பாதுகாப்பு சிகிச்சைகள் ஆகியவற்றிலும் அரசு மருத்துவர்கள் தீவிர கவனத்துடன் செயல்பட்டு உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இதுபோன்ற உண்மைகளை மறைத்து விட்டு, மலிவான விளம்பரத்துக்காக மருத்துவர்களைப் பற்றி தவறான காட்சிகளை உருவாக்குவதை திரைப்பட இயக்குநர்கள் தவிர்க்க வேண்டும்.

இயக்குநர்களுக்கும் சமூக பொறுப்புணர்வு உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். திரைபடங்களில் கதாநாயகன் ஒருவரே 20-க்கும் மேற்பட்டவர்களை அடித்து வீழ்த்துவது போன்ற எதார்த்தத்துக்கு புறம்பான காட்சிகளை வைப்பதுபோல, விளம்பரத்துக்காக காட்சிகளை வைத்து நன்றாக இயங்கி வரும் மருத்துவத்துறையை பாதிக்க செய்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com