5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டும்

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
விழாவில், பெயர் பலகையைத் திறந்துவைத்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி. உடன், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், என்.சதீஷ்குமார்
விழாவில், பெயர் பலகையைத் திறந்துவைத்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி. உடன், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், என்.சதீஷ்குமார்

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது: 
நீதிமன்றங்களுக்கு வழக்குரைஞர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் வழக்குகள் தேக்கமின்றி விரைவில் நீதி வழங்க முடியும். சிறிய வழக்குகளில் கூட நீதி வழங்குவதற்கு கால தாமதமாவதால் வழக்குத் தொடுத்தவருக்குப் பலனே இல்லாமல் அவரது அடுத்த தலைமுறையினர்தான் பலனை அனுபவிக்க வேண்டியுள்ளது.
காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை உணர வேண்டும். இதற்காகவே 5 ஆண்டுகளுக்குமேல் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்குரைஞர்களும், நீதித் துறையினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உதகையில் அமையவுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கும் பயனளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என்றார்.
குந்தாவில் விரைவில் தாலுகா நீதிமன்றம்-சட்ட அமைச்சர் தகவல்: விழாவில், அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
உதகையில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் அமைப்பதற்கு அரசு ரூ. 28.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 1996-ஆம் ஆண்டிலேயே ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் வழக்குரைஞர்களின் போராட்டம் காரணமாக இப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது பணிகள் உடனடியாகத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் எவ்வித தடங்கலும் இன்றி இந்த நீதிமன்றக் கட்டடம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது இயங்கிவரும் 14 நீதிமன்றங்களில் 7 நீதிமன்றங்கள் உதகையிலும், 3 நீதிமன்றங்கள் குன்னூரிலும், 2 நீதிமன்றங்கள் கூடலூரிலும், கோத்தகிரி, பந்தலூரில் தலா ஒரு நீதிமன்றமும் இயங்கி வருகின்றன. இவற்றில் 11 நீதிமன்றங்கள் சொந்தக் கட்டடங்களிலேயே இயங்கி வருவதால் எஞ்சியுள்ள 3 நீதிமன்றங்களும் விரைவில் அரசு கட்டடங்களுக்கு மாற்றப்படும். 
தமிழகத்தில் தற்போது 88 சதவீத நீதிமன்றங்கள் அரசு, சொந்தக் கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றன. கடந்த 8 மாதங்களில் சாத்தான்குளம், தென்காசி, தஞ்சாவூர், சிவகாசி, வாடிப்பட்டி, செங்கம், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, ராஜபாளையம், கிருஷ்ணகிரி, உதகையில் ரூ. 173.35 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அதேபோல, ரூ. 98 கோடியில் 196 புதிய நீதிமன்றங்கள் அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், குந்தாவிலும் விரைவில் தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும். தேங்கியுள்ள சிறு வழக்குகளை விரைந்து விசாரிக்க 31 மாலை நேர நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதைப் போலவே, 32 சிறப்பு நீதிமன்றங்களும் நிறுவப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்களை கணினி மயமாக்குவதற்காக ரூ. 65.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூ. 117 கோடி செலவில் பல்வேறு நீதிமன்றங்களுக்கு 3,400-க்கும் மேற்பட்ட புதிய, கூடுதல் பணியாளர்களை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்குரைஞர்களுக்கான சேம நல நிதி ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான அரசாணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றார்.
நீலகிரி மாவட்டத்துக்கான பொறுப்பு நீதிபதியும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார் பேசியதாவது:
18 ஆண்டுகால முயற்சிக்குப் பின்னர் தற்போதுதான் உதகையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 20 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார். 
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் பேசியதாவது:
நாட்டின் மிகப் பழமையான நீதிமன்றங்களில் உதகை நீதிமன்றமும் ஒன்று. தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த இம்மாவட்டத்தில் அவர்கள் பயனடையும் வகையில் தொழிலாளர் நீதிமன்றத்தை உதகையில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் திட்ட அறிக்கை வாசித்தார்.
இதில், சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆர்.சக்திவேல், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com