அதிமுகவில் விஸ்வரூபமெடுக்கும் இரண்டு முக்கிய தலைவர்கள் மோதல்! 

தொடர்ந்து எனக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் செயல்பட்டு வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்...
அதிமுகவில் விஸ்வரூபமெடுக்கும் இரண்டு முக்கிய தலைவர்கள் மோதல்! 

சென்னை: தொடர்ந்து எனக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் செயல்பட்டு வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியில், அதிமுக அவைத்தலைவரான இ.மதுசூதனன் சேர்ந்து பணியாற்றினார்.

பின்னர் காட்சிகள் மாறி தற்போது இரு அணிகளும் ஒன்றாக இணைந்து, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் அதிமுக தலைமை விரும்பினால் நானே அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று மதுசூதனன் அறிவித்தார். ஆனால் அவருக்கு எதிராக, '‘மீனவர்கள் அதிகம் வாழும் ஆர்.கே.நகர் தொகுதியில், மீனவர் ஒருவருக்ககே வாய்ப்பு அளிக்கலாம்’ என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து தெரிவிதிருந்தார். 

நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட குடியிருப்பு பகுதி ஒன்றில், அதிமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியில் மதுசூதனன் ஈடுபட்டிருநதார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மூத்த தலைவர்கள் யாரும் கட்சியில் இருந்தால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற பயத்தில், அமைச்சர் ஜெயக்குமார் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார். தற்பொழுது வந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மீனவ சமுதாயம் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கூறும் அவர், அந்த சமுதாயத்தினருக்கு இதுவரை என்ன செய்துள்ளார்?

இப்பொழுது மட்டுமல்ல, கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து என் அரசியல் பயணத்தை முடக்கும் விதமாக ஜெயக்குமார் செயல்பட்டு வருகிறார். கட்சித் தலைமைக்கும் மீனவ மக்களுக்கும் எதிராக செயல்படும் அவர் மீது கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மதுசூதனன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com