இரட்டை இலை சின்னம் விரைவில் கிடைக்கும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னம் விரைவில் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னம் விரைவில் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
பொன்னேரி ஹரிஹரன் பஜார் கடை வீதியில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுகவின் 46-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது:
அதிமுக உருவாக மூலக் காரணம் கருணாநிதிதான். அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு கருணாநிதி திமுகவை கபளீகரம் செய்து கொண்டு ஒரு குடும்பத்தின் பிடிக்குள் கொண்டு வந்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கி 1977-ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்தார். மக்கள் சக்தி மூலம் தொடர்ந்து மூன்று முறை அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா 27 ஆண்டுகள் அதிமுக பொதுச்செயலாளராக இருந்தார். எம்.ஜி.ஆர். மறைவின்போது 16 லட்சமாக இருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 1.50 கோடியாக ஜெயலலிதா உயர்த்தினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் வசம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலைக்கு பிறகு தற்போது கட்சியையும் ஆட்சியையும் காப்பற்றியது தொண்டர்கள்தான். இந்த இயக்கம் காப்பற்றப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே நாம் ஒன்றாக இணைந்துள்ளோம். 
2016-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆவதற்காக ஸ்டாலின் பலவித மாறுவேடங்களை போட்டு, நடந்தும், ஓடியும் சைக்கிளில் சென்றும் பார்த்தார். அம்மா மீது வைத்திருந்த பற்று காரணமாக மீண்டும் நாமே ஆட்சிக்கு வந்தோம். 2006-2011 திமுக ஆட்சியில் நில அபகரிப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அவர்கள் (திமுகவினர்) செய்த அக்கிரமங்கள் காரணமாக இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என திமுகவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் என்றார்.
கூட்டத்துக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலரும், பொன்னேரி எம்எல்ஏவுமான, சிறுணியம் பலரமான் தலைமை வகித்தார். தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவள்ளூர் வேணுகோபால், அரக்கோணம் அரி, எம்எல்ஏக்கள் கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி), அலெக்ஸாண்டர் (அம்பத்தூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
பொதுமக்கள் அவதி: துணை முதல்வர் வருகையையொட்டி பொன்னேரி ஹரிஹரன் பஜார் சாலை முழுவதும் மறித்து பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. இதனால், இந்த வழியே வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மேடை அமைக்கப்பட்ட இடம் அருகே இருந்த தனியார் மெட்ரிக். பள்ளி இரண்டு நாள்களாக மூடப்பட்டது.


பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com