சசிகுமாரை கொல்லப் பயன்படுத்திய ஆயுதங்களைத் தேடும் சிபிசிஐடி போலீஸார்

இந்து முன்னணி நிர்வாகி சசிகுமாரைக் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களைத் தேடும் பணியில் சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை ஈடுபட்டனர். 
உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையில் உள்ள குட்டையில் ஆயுதங்களைத்  தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சிபிசிஐடி போலீஸார்.
உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையில் உள்ள குட்டையில் ஆயுதங்களைத்  தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சிபிசிஐடி போலீஸார்.

இந்து முன்னணி நிர்வாகி சசிகுமாரைக் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களைத் தேடும் பணியில் சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை ஈடுபட்டனர். 
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்டச் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார் (37). இவர், 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த சதாம் உசேன், முபாரக் மற்றும் சிலருக்குக் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரைப் பற்றிய தகவல்களை மறைத்தற்காக சாய்பாபா காலனியைச் சேர்ந்த சையது அபுதாஹீரை கடந்த மார்ச் 23-ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த எஃப். சதாம் கருமத்தம்பட்டி அருகே ஆகஸ்ட் 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த சுபேர் (33) முள்ளுப்பாடி ரயில்வே கேட் அருகே அக்டோபர் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
கழிவுநீர்ப் பண்ணையில் அரிவாள்: இந்த விசாரணையின்போது சசிகுமார் கொலை தொடர்பாக பல்வேறு தகவல்களை போலீஸாரிடம் சுபேர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதில், சசிகுமாரைக் கொலை செய்யப் பயன்படுத்திய இரு அரிவாள்களையும் உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையில் வீசிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, சிபிசிஐடி சிறப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆனந்தகுமார், விஜயராகவன் மற்றும் நான்கு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீஸார் சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையில் ஆயுதங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 
அங்குள்ள இரண்டு குட்டைகளிலும் அதிக அளவு கழிவுநீர் உள்ளதால் 8 கழிவுநீர் வாகனங்கள் மூலமாகத் தண்ணீரை இறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
எனினும் இந்தப் பணிகள் நிறைவடைய ஒரு சில நாள்கள் ஆகும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். 
அதேவேளையில், சுபேரை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். முன்னதாக கொலை நிகழ்ந்த இடத்துக்கு புதன்கிழமை இரவு சுபேரை அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி விடியோ பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள முபாரக், கனி ஆகியோரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com