டெங்கு: வேலூரில் ரூ. 10 லட்சம் அபராதம்

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க தவறியமைக்காக ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
டெங்கு: வேலூரில் ரூ. 10 லட்சம் அபராதம்

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க தவறியமைக்காக ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குடியிருப்புகள், தனியார் கட்டடங்கள், அரசு அலுவலகங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் அடைக்கப்பட்டிருக்கும் பொருள்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேங்கிய மழைநீரில் எளிதில் நோய் பரவ வாய்ப்புள்ளது என்பதால் அதை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகின்றது.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் சனிக்கிழமை சுத்தப்படுத்தி கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், தூய்மைப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளிலும் ஏடீஸ் கொசுக்களை ஒழிக்கும் பணியை முழுமையாகச் செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாவட்டம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதால் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. 
டெங்கு காய்ச்சலை பரப்பும் வகையில் பழைய பொருள்களை அகற்றாமலும், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்காத குடியிருப்புகள், கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட போது ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி இருந்ததால் சுங்கச்சாவடிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து இதுவரையில் ரூ. 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வரை ஆய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com