ரஜினிக்கு பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு

ரஜினிக்கு பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க.வுக்கு வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க.வுக்கு வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி ஸ்ரீ மகாதேவர் கோயில் அருகில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பக்கச்சுவர் அமைக்க ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 
இப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நாகை மாவட்டம், பொறையாறில் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 8 தொழிலாளர்களுக்கும் இதயப்பூர்வ அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். இக் கட்டடம் திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிய வருகிறது. தரம் குறைவாக இக் கட்டடம் கட்டிய திமுக அரசையும், கவனக் குறைவாக இருந்த தற்போதைய அதிமுக அரசையும் குற்றவாளிகளாகச் சேர்த்து தனி அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.
மெர்சல் திரைப்படம் குறித்து சுட்டுரையில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், தான் திறமையாக பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார். திரைப்படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டது என்பது முக்கியம். 
இப் படத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் பரப்பப்பட்டுள்ளன. எல்லா கட்சிகளையும் சேர்த்து விமர்சித்தால் கருத்துரிமை. ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியை தாக்கிப் பேசுவது அரசியல். கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருவதாகக் கூறி வருகிறார்கள். ரஜினி பா.ஜ.க.வுக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். கமல் தனது நிலைப்பாட்டை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
மத்திய அமைச்சருடன் மாவட்ட பாஜக தலைவர் எஸ். முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலர் கே.எஸ். முருகன், மேல்புறம் ஒன்றியத் தலைவர் சதீஷ் சந்திரன், களியக்காவிளை மண்டல பாஜக தலைவர் எஸ்.ஆர். சரவணவாஸ் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தனது தொகுதி மேம்பாட்டுத் திட்டதின் கீழ் அருமனை பேரூராட்சியில் கட்டப்பட்ட பாலம், களியக்காவிளை பேரூராட்சி போற்றிவிளை இட்டியறகுளம் கோயில் அருகே கட்டப்பட்ட கலையரங்கம், பளுகல் சந்திப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளிட்டவற்றையும் பொன். ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com