ரூ.50 ஆயிரம் லஞ்சம்: டாஸ்மாக் மேலாளர் கைது

விழுப்புரத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கும் கட்டட உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

விழுப்புரத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கும் கட்டட உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கடலூரில் உள்ள அவரது வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசம் அரிதாங்கல் சாலையைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் (41). இவருக்குச் சொந்தமான கட்டடத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகே முத்துலிங்கம் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடைக்கான 6 மாத வாடகை ரூ.30 ஆயிரம் முத்துலிங்கத்துக்கு வழங்காமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. மேலும், டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி முத்துலிங்கம் கடை வைத்துள்ளார். அண்மையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முகுந்தன், அந்தக் கடையை அகற்றி விட்டு சென்றார்.
இதனால், மதுக்கடை வாடகை நிலுவைத் தொகையைப் பெறவும், மதுக்கடை அருகே பெட்டிக்கடை நடத்தவும் அனுமதிக்கக் கோரி கடை விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள் மூலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முகுந்தனை முத்துலிங்கம் அணுகினார். வாடகை நிலுவைத் தொகையை வழங்கவும், பெட்டிக்கடை நடத்த அனுமதியளிக்கவும் தனக்கு ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என முகுந்தன் கேட்டாராம்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் முத்துலிங்கம் புகார் அளித்தார்.
இதையடுத்து டிஎஸ்பி (பொறுப்பு) சரவணக்குமார், ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் அறிவுரையின் பேரில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள சுதாகர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் முகுந்தன் வீட்டுக்கு சனிக்கிழமை காலை சென்ற முத்துலிங்கம், அவரிடம் ரூ.50 ஆயிரத்தை வழங்கியுள்ளார். 
இதை மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், முகுந்தனைக் கைது செய்தனர். மேலும், அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மதுக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். கடலூர் சாவடி கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள முகுந்தனின் சொந்த வீட்டிலும், ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com