திருவண்ணாமலையில் 7 போலி மருத்துவர்கள் கைது

திருவண்ணாமலையில் 7 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவே கடந்த வருடத்தில் மட்டும் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின்எண்ணிக்கை...
திருவண்ணாமலையில் 7 போலி மருத்துவர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட சோதனையில் 7 போலி மருத்துவர்கள் சிக்கினர். இவர்கள் அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 மருந்தகங்களுக்குச் சீல் வைக்கப்படட்து.

இதில், செங்கத்தைச் சேர்ந்த முருகேசன், ஆவுரைச் சேர்ந்த ரவி மற்றும் சந்திரன், வைப்பூரைச் சேர்ந்த சரவணன், வேட்டவலத்தைச் சேர்ந்த கதிரவன், போளூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சந்தவாசலைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் வருவாய் பிரிவு அதிகாரியின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

அதோடு செங்கம் மற்றும் மேல் செங்கத்தில் செயல்பட்டு வரும் கணேஷ் மெடிக்கல்ஸ், கோகுல் மெடிக்கல்ஸ், தன்வந்திரி க்ளினிக், பாலா க்ளினிக் மற்றும் ஆர்.சேட்டு க்ளினிக் ஆகிய மருந்தகங்களுக்குச் சீல் வைக்கப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற போலி மருத்துவர்களை அவர்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் அறிவுரையின்றி மருத்துகள் வழங்கும் மருந்தகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:

வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளின் உதவி இருந்தால் மட்டுமே இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இதன் அடிப்படையில் இன்னும் சில இடங்களில் போலி மருத்துவம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மொத்த விலையில் விற்கப்படும் மருந்துகள் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். அங்கீகாரம் இல்லாத மருத்துவர்களுக்கு மருந்துகள் செல்வது இதன்மூலம் தெரியவரும். எனவே அதன்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்று போலி மருத்துவர்களை ஒழிப்பது கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும். தனிப்பட்ட முறையில் எங்களால் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என்றார்.

இதுபோன்ற போலி மருத்துவர்களின் விவகாரங்கள் தொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது:

பலமுறை இதுபோன்று போலி மருத்துவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இதன்மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் அதுபோன்று கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீண்டும் வெளியே வந்த பின்னர் அதையே திரும்பச் செய்கின்றனர். இந்த கைது நடவடிக்கைகள் அவர்களை எவ்வித்திலும் பாதித்ததாக தெரியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை தேவை. இதுபோன்ற போலி மருத்துவர்கள் குறைந்த அளவில் மருத்துவம் பார்ப்பதாகக் கூறிக்கொண்டு எளிய மக்களை ஏமாற்றுவது வாடிக்கையாகி விட்டது. எனவே மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு ஆண்டாக இதுபோன்று நடவடிக்கைகளின் மூலம் 40 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com