நிலவேம்பு: முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப் பதியலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு

கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பிலும் பல்வேறு பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில்...
நிலவேம்பு: முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப் பதியலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அமைப்பினர், கட்சியினர் சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பிலும் பல்வேறு பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில் அவர் கூறியதாவது: சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும். ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான் என்று கூறியிருந்தார். 

கமலின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு விமரிசனங்கள் எழுந்தன. நிலவேம்பு குடிநீர் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்து, சமூக விரோதச் செயல் என, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்தார். 

இந்நிலையில் நிலவேம்புக் குடிநீர் விவகாரத்தில் அரசுக்கு எதிரான தவறான கருத்தை கமல் பரப்புகிறார், எனவே அவர்மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்கிற கோரிக்கையுடன் தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com