கமல் - கேரள முதல்வர் சந்திப்பு! அரசியல் குறித்து பேசியதாக கமல் பேட்டி!

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், நடிகர் கமல் ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்தித்தார்... 
கமல் - கேரள முதல்வர் சந்திப்பு! அரசியல் குறித்து பேசியதாக கமல் பேட்டி!

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், நடிகர் கமல் ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்தித்தார். 

கடந்த இரண்டு வருடங்களாக கமலும் பினராயி விஜயனும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கடிதம் எழுதியுள்ளார்கள். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரின் இல்லத்துக்கு கமல் வருகை தந்தார். ஓணம் பண்டிகையொட்டி, கமலுக்கு மதிய உணவு விருந்து அளித்தார் கேரள முதல்வர்.

முதல்வரைச் சந்தித்த பிறகு கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த வருடமே கேரள முதல்வரை நான் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு விபத்து ஏற்பட்டதால் சந்திக்க முடியாமல் போனது. அவருடைய சிறப்பான ஆட்சியின் முதல் வருடத்தைக் கொண்டாடி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் ஓணம் மதிய உணவு விருந்துக்காகவும் வந்துள்ளேன். அவருடன் சாதாரண விஷயங்களைப் பேசுவதற்காக மட்டுமில்லாமல் அவருடைய அரசியல் அனுபவத்தின் மூலமாக அரசியல் தொடர்பான உரையாடலுக்காகவும் வந்தேன். ஒரு அரசியல் தலைவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு இதுவும் ஒரு வழி என்றார். 

கோவை, ஈச்சனாரியில் புதன்கிழமை நடைபெற்ற தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன் அங்கு பேசியதாவது:
 
தமிழக அரசியலை இப்படியே விட்டு வைப்பது அவமானம். இதை மாற்ற வேண்டியது நமது கடமை. நமது பாதையில் வரும் குண்டும்குழியும், வறுமையும் நாமே வரவழைத்துக் கொண்டதுதான். நான் கோபப்படுவது உங்களுக்காகவே என்பது புரியும். இங்கு, அரசாங்கத்தின் கஜானா எனது சொத்து. அதைத் தொடாதே என்று அரசியல்வாதிகளிடம் மக்கள் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கஜானாவில் இருந்து எனக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்று பங்கு கேட்டதால்தான் இன்று மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 500-க்கும், ஆயிரத்துக்கும் 5 ஆண்டுகளை விற்றுவிட்டீர்கள். உங்களது பேரப் பிள்ளைகள் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்காக களை பறிக்க வேண்டும். களை பறிக்க வேண்டியது வயலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்தான். அதற்கான நேரம் உங்களுக்கு வந்துவிட்டது. நீங்கள் தலைவராக வாருங்கள் என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், தலைமை ஏற்கும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால் அதற்கான வேலையை இந்த சுப முகூர்த்த வேளையில் தொடங்குங்கள். இது அரசியல் பேச்சு அல்ல. என் சமூகத்துக்கான பேச்சு. போராடுங்கள். உங்களது கைகள் சுத்தமாக இருக்கட்டும். அதன்பின் நீங்கள் கேட்கலாம் மற்றவர்களின் கைகள் சுத்தமாக இருக்கிறதா என்று. நாம் நமது வேலையை மட்டும் செய்வோம். நேரம் வரும்போது கோட்டையை நோக்கிப் புறப்படுவோம் என்றார்.

இதையடுத்து கேரள முதல்வரை கமல் சந்தித்துள்ளதால் தமிழக அரசியல் சூழலில் கமலை முன்வைத்து மீண்டுமொரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com