வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 
வாகனம் ஓட்டுபவர்கள் இன்று முதல் தங்களது ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என்றும் ஒரு உத்தரவை ‘குதிரை பேர’ அரசு பிறப்பித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்தின் ஆட்சியை சதிகளின் மூலம் சந்தி சிரிக்க வைத்து ஊழலிலும், பேரங்களிலும் முழுவதுமாய் மூழ்கிக் கொண்டிருக்கும் அமைச்சர்களும், முதல்வரும் அரசியல் சட்ட விதிகளை எந்தவித அச்சமும், கூச்சமுமின்றி காலில் போட்டு மிதித்து, பதவியில் வெட்கம், நாணமின்றி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்னொருபுறம் வாகனத்தை ஓட்டும் பொதுமக்களும், ஓட்டுநர்களும் ஒரிஜினல் லைசன்சை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்று, சட்டத்தை நிலைநாட்ட முனைவது போல் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்காதவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சிறைதண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது 500 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற ‘குதிரை பேர’ அரசின் ‘கோமாளித்தனமான’ உத்தரவுக்கு, ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. ஏற்கனவே போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஓட்டிகளின் ஒரிஜினல் லைசென்ஸைப் பறித்து வைத்துக் கொண்டு அவர்களை துன்பத்திற்கும், துயரத்திற்கும் உள்ளாக்குகிறார்கள். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட ஒரிஜினல் லைசென்ஸுகள் மூட்டைக்கட்டி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, போக்குவரத்து புலானாய்வுப் பிரிவு, மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலகம், போன்றவற்றில் உள்ள சில அதிகாரிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளுக்கு அளிக்கும் தொந்தரவுகளுக்கு எல்லையே இல்லை. சென்னை மாநகரத்தின் சாலைகளில் போக்குவரத்தைச் சரிசெய்வதை விடுத்து, மூலை முடுக்குகளில் ஒளிந்து நின்று இருசக்கர வாகன ஓட்டிகளையும், வாடகைக் கார் ஓட்டுநர்களையும், ஆட்டோ ஓட்டுநர்களையும் பாய்ந்துப் பிடித்து சில போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் ‘பஞ்சாயத்து’ செய்யும் வாட்ஸ் அப் காட்சிகள் சமூக வலைதளங்களில் வந்து, காவல்துறையில் உள்ள நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும் பெரும் தலை குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே கெடுபிடி செய்து கொண்டிருக்கும் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, இன்னொரு ஆயுதத்தைக் கையில் வசதியாகக் கொடுத்தது போல், “ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாதவரைப் பிடித்து அபராதம் வசூலிக்கலாம். மூன்று மாதம் சிறையில் தள்ளலாம்”, என்ற அதிகாரம் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், கூலி வேலைகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் இருசக்கர வாகனத்தில் செல்லும் சாதாரண சாமானிய மக்கள் ஆகியோக்கு தாங்கமுடியாத அவதிகளையும், அலைச்சல்களையும்  அளிக்கும்.

விபத்துகளைக் குறைக்க எத்தனையோ ஆக்கபூர்வமான வழிமுறைகள் இருக்கின்றன. போக்குவரத்துக் காவல்துறையை ஆங்காங்கே உரியமுறையில் போக்குவரத்தை சரி செய்வதில் ஈடுபடுத்தினாலேயே விபத்துக்கள் பெருமளவில் குறையும். சிக்னல்களை மீறுவோரை விரட்டிப் பிடிக்கிறோம் என்று அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதைத் தவிர்த்து, அனைத்து சிக்னல்களிலும் கேமராக்களைப் பொறுத்தி, தவறு செய்யும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால், எந்தநேரமும் கையில் ஒரிஜினல் லைசென்ஸை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடுவது எந்த விதத்திலும் “விபத்தைக் குறைக்க” உதவாது என்பது நூற்றுக்கு நூறு சதவீதமான உண்மை. லைசென்ஸ் வழங்குவதில் உள்ள முறைகேடு, மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையில் உள்ள ஊழல் போன்றவற்றைக் களையாமல், பொதுமக்கள் ஒரிஜினல் லைசென்ஸை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடுவது “துக்ளக் தர்பாரின்” ஒரு பிற்போக்குத்தனமான உத்தரவாகவே அமைந்திருக்கிறது.

இந்த உத்தரவானது விபத்துகளைக் குறைக்க உதவுவதை விட, வாகன ஓட்டிகளை கடும் இன்னலுக்கு ஆளாக்கவே உதவும். ஆகவே, வாகன ஓட்டிகளையும், ஓட்டுநர்களையும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் “ஒரிஜினல் லைசென்ஸை வைத்திருக்க வேண்டும்” என்ற இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்று, ஏற்கனவே இருக்கின்ற நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

விபத்துக்களைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், போக்குவரத்து நெருக்கடிகளை சரி செய்தல், தானியங்கி சிக்னல்கள் அமைத்தல், சிக்னல்களில் கேமராக்கள் பொருத்துதல் போன்றப் பணிகளில் ஆர்வம் காட்டாமல், சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டிருக்கும் ‘குதிரை பேர’ ஆட்சி, பொதுமக்களைப் பார்த்து “ஒரிஜினல் லைசென்ஸ்” வைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்துவது வேடிக்கை மட்டுமல்ல, ஆளத் தெரியாதவர்கள் கையில் சிக்கிக் கொண்ட அரசு நிர்வாகத்தின் அலங்கோலமாகவே இருக்கிறது.

எனவே, அராஜகமான உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலம் சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்தி, மக்களை ஏமாற்றி விடலாம் என பெரும்பான்மையை இழந்து, சட்ட விரோதமாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி எண்ணுவது பகல் கனவாகவே பட்டுப்போகும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com