'விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்'

சட்டப்பேரவையில் விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திமுக
திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.

சட்டப்பேரவையில் விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழா பொதுக்கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ கே.எஸ். மூர்த்தி தலைமை வகித்தார். 
இதில் திமுக செயல்தலைவர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியது:
அதிமுகவைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என கடிதம் கொடுத்த நிலையில், திமுக சார்பில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடக் கோரி, ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 
நாளையோ, நாளைய மறுநாளோ நம்பிக்கையில்லா தீர்மானம் வரும். அப்படி வரும்போது முதல்வருக்கு 83 பேர் தான் ஆதரவு தருவர். இப்படி இருக்கும் சூழலில் மாநில நிர்வாகத்தை எப்படி செயல்படுத்த முடியும். 
தடை செய்யப்பட்ட குட்கா தமிழகத்தில் எல்லாக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது என்று சட்டப்பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன். அதன் பின் குட்கா தொடர்பாக 924 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு எந்த நீதிபதி விசாரிக்கிறார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆண்டுக் கணக்கில் இல்லை, மாதக் கணக்கில் இல்லை, நாள் கணக்கில் மிகப்பெரிய மாற்றம் தமிழகத்தில் நடைபெற போகிறது என்றார் அவர். கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சேலத்தில்...: சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் மகள் கார்த்திகா- ரகுநாத் திருமண விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருமணத்தை மு.க.ஸ்டாலின்-துர்கா தம்பதியினர் நடத்தி வைத்தனர். பின்னர், மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசியது:
சேலம் அஸ்தம்பட்டியில்தான் முதன் முதலாக பெரியார் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் நடத்தப்பட்டது. 1967-ஆம் ஆண்டு வரை சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. 1967-ஆம் ஆண்டில் திமுக ஆட்சியைப் பிடித்து, அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது, சட்டப்பேரவையில் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற தீர்மானத்தை முதலாவது தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன்பிறகே சட்டப்படி அங்கீகாரம் கிடைத்தது.
திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது: திராவிட இயக்கத்தை அழிக்க, ஒழிக்க நினைக்கிறார்கள். நாட்டை ஆள்பவர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலம் சரி, திமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது. திமுக எப்போதும் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராது. மாறாக, மக்களைச் சந்தித்து, மக்கள் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வருவோம்.
விடிவுகாலத்தை திமுக ஏற்படுத்தும்: முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரை அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதேவேளையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், இது அதிமுக கட்சிக்குள் நடக்கும் பிரச்னை என்பதால் முடிவு எடுக்க முடியாது என ஆளுநர் தெரிவித்ததாக மனு அளித்தவர்கள் தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு சட்டப்பேரவையைக் கூட்ட 19 எம்எல்ஏக்கள் தனித்தனியாக மனு அளித்தனர். இந்த எண்ணிக்கை 25, 27 என செல்கிறது. 40 பேருக்கு மேல் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சட்டப்பேரவையில் 89 திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆழ்ந்து சிந்தித்து சட்ட ரீதியாக விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். இதை திமுக நிச்சயம் செய்யும். இந்த முடிவு சுயநலத்துக்காக அல்ல. தமிழக மக்களின் நன்மைக்காக எடுப்போம். விரைவில் தமிழகத்தின் விடிவுகாலத்தை ஏற்படுத்தி தருகிற சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி தரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com