அரசின் மெத்தன போக்கால் அனிதா தற்கொலை; ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்: திருமாவளவன் பேட்டி

நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல, மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம் என விடுதலை சிறுத்தை
அரசின் மெத்தன போக்கால் அனிதா தற்கொலை; ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்: திருமாவளவன் பேட்டி


அரியலூர்: நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல, மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல, மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் வாய்ந்த மாணவி அனிதா நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் அனிதா படித்த மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை. மாறாக மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதால் அனிதாவை போல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை நீட் தேர்வின் மூலம் மதிப்பிழக்க செய்துவிட்டனர். இதனால் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில் மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் ஊசலாட்ட நிலையில் இருந்ததால் மாணவர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை வளர்த்துவிட்டது. ஒருபுறம் நீட்தேர்வுக்கு எதிரான சட்டங்களை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டு இன்னொருபுறம் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி சேர்க்கை தொடர்பாக அரசாணையையும் பிறப்பித்தது. அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் சட்டத்தை மீண்டும் இயற்றியது. இதன் மூலம் அனிதா உள்ளிட்ட மாணவர்களிடையே தமிழக அரசு மறுபடியும் ஒரு நம்பிக்கையை விதைத்தது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர் அச்சட்டத்தை தள்ளுபடி செய்ய வாதாடினார். அதன்படி அச்சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய அரசும் மாநில அரசும் நடத்திய நாடகம் இன்றைக்கு அனிதாவை பலி வாங்கியிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த உயிர்பலிக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மாணவர் சமூகத்தின் கனவுகளை நொறுக்குகிற வகையிலும், நீட் தேர்வை வலிந்து திணித்த மத்திய அரசின் நடவடிக்கைகளையும், மத்திய அரசுக்கு பணிந்தும் இணங்கியும், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசின் போக்கினையும்  வன்மையாக கண்டிக்கிறோம்.

நீட் தேர்வை தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க வேண்டும் என்றில்லாமல் அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டுமென குரலெழுப்ப வேண்டிய தேவையை அனிதாவின் சாவு நமக்கு உணர்த்துகிறது. தொடக்கத்திலிருந்தே அகில இந்திய அளவில் இதை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் தமிழகம் நீட் தேர்வை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி போராட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவ சமூகம் வெகுண்டெழுந்து அறவழியில் போராட முன்வர வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கவேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய,மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தம்மை தாமே மாய்த்துகொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு போதும் முயற்சித்தல் கூடாது.

தொடர் போராட்டம் குறித்து தோழமை கட்சிகளுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com