உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதா? ராமதாஸ் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதா? ராமதாஸ் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இந்தியாவில் நகர்ப்பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதாகக் கூறி, தமிழகத்தில் அனைத்து நெடுஞ்சாலைகளிலும்  மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் திறக்க தமிழக அரசின் கலால் மற்றும் மதுவிலக்கு ஆணையர் அனுமதியளித்திருக்கிறார். அதனடிப்படையில் பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன.

உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையை புரிந்து கொள்ளாமலேயே இப்படி ஒரு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. நகர்ப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் கூறவில்லை. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று 31.03.2017 அன்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நாடு முழுவதும் நெடுஞ்சாலையோரங்களில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளும், விடுதிகள் உள்ள குடிப்பகங்களும் மூடப்பட்டன. சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் நகரப்பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 

அதை எதிர்த்து ஒரு தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘‘டிசம்பர் 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மது வணிகத்துக்கான உரிமம்  வழங்க தடை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் மாநில நெடுஞ்சாலைகளை பெரிய மாவட்ட சாலைகளாக மாற்றுவதை எந்த வகையிலும் தடுக்கவில்லை. அந்தவகையில் சண்டிகர் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாக ஆகாது’’ என கூறியுள்ளது. மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில்  மதுக்கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடை நகரப்பகுதிகளுக்கு பொருந்தாது என்று 11.07.2017 ஆம் தேதியிட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் எங்குமே குறிப்பிடவில்லை.

மாறாக மேற்கண்ட அறிவுறுத்தல்களை வழங்கிய உச்ச நீதிமன்றம், அவற்றின் அடிப்படையில் நகரப் பகுதிகளில் உரிமம் பெற்ற மதுக்கடைகளை நடத்தத் தடையில்லை என்று தான் கூறியிருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அந்த ஒற்றை வரியை மட்டும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட தமிழக அரசு, உச்ச நீதிமன்றமே அனுமதித்து விட்டதாகக் கூறி நகரப்பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் விடுதிகளிலும் குடிப்பகங்கள் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நீதிமன்றங்கள் ஆணையிட்ட போது, அதை செயல்படுத்த ஆண்டுக்கணக்கில் அவகாசம் கேட்ட தமிழக அரசு, சட்டவிரோதமாக மதுக்கடைகளை திறப்பதில் மட்டும் இந்த அளவுக்கு அவசரம் காட்டுவதிலிருந்தே தமிழக அரசின் மதுக்கடை பாசத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும். நகரப்பகுதிகளிலுள்ள  மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி மதுக்கடைகளை திறக்கலாம் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதுவே ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பு தான் என்றாலும் கூட, அதையும் தவறாக பயன்படுத்தி நகரப்பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களை தமிழக அரசு திறந்திருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் நகரப்பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி, மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு முயன்றது. இதைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்திய தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்தது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நெடுஞ்சாலைகளை வகைமாற்றி மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து 25.04.2017 அன்று தீர்ப்பளித்தது. அந்தத் தடை இன்று வரை நீடிக்கும் நிலையில், அதை மீறி தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறப்பது உயர் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

தமிழகத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. நீட் தேர்விலிருந்து தமிழக அரசு விலக்கு பெறாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் நலன் சார்ந்த இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண முயலாத அரசு, மதுக்கடைகளைத் திறக்க மட்டும் துடிப்பது வெட்கக்கேடாகும்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். நேற்று மாலை முதல் திறக்கப்பட்ட கடைகள் மற்றும் குடிப்பகங்களை மூட வேண்டும். இதை செய்ய தமிழக அரசு மறுத்தால்  சட்டப் போராட்டத்தின் மூலமும், அரசியல் போராட்டத்தின் மூலமும் மதுக்கடைகளை பா.ம.க. மூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com