அனிதாவின் தற்கொலைக்கு காரணம் அரசியல் சூழ்ச்சி: சொல்கிறார் தமிழிசை!

அரியலூர் மாணவி அனிதாவை தற்கொலைக்குத் தூண்டியது அரசியல் சூழ்ச்சி என்று பாரதிய ஜனதா மாநிலத்  தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனிதாவின் தற்கொலைக்கு காரணம் அரசியல் சூழ்ச்சி: சொல்கிறார் தமிழிசை!

சென்னை: அரியலூர் மாணவி அனிதாவை தற்கொலைக்குத் தூண்டியது அரசியல் சூழ்ச்சி என்று பாரதிய ஜனதா மாநிலத்  தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

அரியலூர் மாணவி அனிதாவை இழந்தது மிகப்பெரிய துயர சம்பவம். வேதனையான விஷயம்.  எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. வறுமையுடன் போராடி சாதித்த அந்த குழந்தையை நீட் தேர்வு போராட்டத்துக்காக டெல்லி வரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு வேளை நீட் தேர்வில் மருத்துவம் கிடைக்காமல் போனால் விவசாயம் படிப்பேன் என்று அனிதா தொலைக்காட்சியில் கூறினார். துணிச்சம் தைரியமும் நிறைந்த அந்த குழந்தை திடீரென்று மனம் மாறி தற்கொலை செய்து கொண்டது எப்படி?

அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? இதன் பின்னணியில் வேறு எதுவும் அரசியல் சூழ்ச்சி உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

நாட்டு மக்கள் எல்லோரையும் வாழ வைக்கக்கத்தான் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் அவர் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்ற நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாக விதைத்து வரும், அரசியல் கட்சிகளின் முகமூடி கிழிக்கப்படும்.

அனிதாவின் மரணத்தை வைத்து சூது அரசியல் நடத்துகிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை செய்து வரும் பிரதமர் மோடியை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மக்களை ஏமாற்றி சாதி அரசியல் செய்வது யார் என்பதை மக்களிடம் எடுத்து சொல்வோம்.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com